Published : 02 Jul 2020 06:50 AM
Last Updated : 02 Jul 2020 06:50 AM

‘எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம்’- ஒப்புக்கொண்டது சீன ராணுவம்

சீன பாதுகாப்புத் துறை கூறும்போது, "இந்தியாவுடன் தீவிரமாக போரிட்டு வருகிறோம். எல்லையில் இந்திய நிலப்பரப்பை கைப்பற்றி உள்ளோம். எங்கள் தரப்பில் உயிரிழப்பு அதிகம்தான்" என்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சீன பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "எல்லையில் இந்திய ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துகிறது. இதுதொடர்பாக தூதரக அலுவலகத்திடம் சீனாவின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். கடுமையான சண்டையில் சீன தரப்புக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போரில் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை சீன அரசு பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் எத்தனை வீரர்கள் உயிரிழந்தார்கள் என்றவிவரத்தை வெளியிடவில்லை.

"எல்லையில் இந்திய வீரர்களுக்கு எதிராக சீன ராணுவம் தாக்குதல் தொடுத்துள்ளது என்று இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருஷ்ணமேனன் குற்றம் சாட்டியிருப்பது பொய்" என்று சீன பாதுகாப்புத் துறை தெரிவித்திருக்கிறது.

சீன நாளிதழ்களில் போர் குறித்த செய்திகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. கம்யூனிஸ்ட் கட்சியின் "பீப்பிள் டெய்லி" நாளிதழில் 3 பெரிய புகைப்படங்கள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இதில், லடாக் எல்லையில் பனி படர்ந்த குன்லுன்சன் மலைப் பகுதியில் 4 சீன வீரர்கள் செல்லும் புகைப்படம் பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது.

தலைநகர் பெய்ஜிங்கில் இலையுதிர் காலம் தொடங்கியிருப்பதால் சூரியனின் ஒளி தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பூங்காக்கள், பொது இடங்களில்சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். ஆங்காங்கே அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்பட்டிருக்கும் நாளிதழ்களை படிப்பதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

'தி நியூ சைனா நியூஸ் ஏஜென்ஸி'யின் செய்தியில்,கெசிலாங் பகுதியில் சீன எல்லைக்குள் இந்திய வீரர்கள் நுழைந்திருப்பதாகவும் அங்குள்ள சீன வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்கள் பெருமளவில் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். சீன வீரர்கள் தற்காப்புக்காக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

7 நிலைகளை மீட்டுள்ளோம்

‘தி நியூ சைனா நியூஸ் ஏஜென்ஸி' வெளியிட்டுள்ள செய்தியில், தீவிர சண்டைக்குப் பிறகு கிழக்கு எல்லையில் ஜுங்புதி, சேகோபு, கெனிங்னாய், ஜிதிங்பு, தாங், நியாங்பா, துரோகுங் பாலம் ஆகிய7 நிலைகளை இந்தியாவிடம் இருந்து சீன ராணுவம் மீட்டிருக்கிறது. கெசிலாங் நதிப் பகுதியில் இந்திய வீரர்கள் புதிதாக தாக்குதலை தொடங்கி உள்ளனர். சீன வீரர்கள் தற்காப்புக்காக தாக்குதல் நடத்தி வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

(கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா - சீனா போரின்போது, என்ன நடந்தது என்பது குறித்து ‘தி இந்து’ ஆங்கிலநாளிதழில் வெளியான செய்தியின் தமிழாக்கம்.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x