Last Updated : 10 Aug, 2015 06:47 PM

 

Published : 10 Aug 2015 06:47 PM
Last Updated : 10 Aug 2015 06:47 PM

ஆம் ஆத்மி கட்சியின் 67 எம்எல்ஏக்களும் திகார் சிறையில் இருந்தும் பணியாற்ற தயார்: கேஜ்ரிவால் ஆவேசம்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசின் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தடுக்கிறார் என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

“எங்கள் எம்எல்ஏக்கள் 67 பேரும் திகார் சிறையில் இருந்து பணியாற்றவும் தயார்” என்றும் கேஜ்ரிவால் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புராரி மருத்துவமனையை 800 படுக்கை வசதி கொண்டதாக மேம்படுத்தும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று கேஜ்ரிவால் பேசியதாவது:

கடந்த 6 மாதங்களில் எங்கள் எம்எல்ஏக்களில் 3 பேரை மத்திய அரசு கைது செய்துள்ளது. ஆனால் எங்களிடம் இன்னும் 64 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்நிலையில் 10 ஆண்டுகள் ஆனால் கூட எங்கள் அனைவரையும் அவர்களால் கைது செய்ய முடியாது. டெல்லி காவல்துறை எங்கள் எம்எல்ஏக்களை சுற்றிசுற்றியே வருகிறது. மக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்து காவல் துறைக்கு நேரமில்லை. நாங்கள் எல்லோரும் உங்களிடம் சரண் அடைந்து விடுகிறோம், திஹார் சிறையில் இருந்து பணியாற்றுகிறோம் என்று நான் அவர்களிடம் கூறிவிட்டேன்.

கடந்த ஜூன் 8-ம் தேதி துணை ராணுவப் படையை அனுப்பி, டெல்லி மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு பிரிவை நரேந்திர மோடி கைப்பற்றினார்.

ஊழலுக்கு எதிரான போரில் கடந்த ஜூன் 8-ம் தேதி வரை நாங்கள் 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை கைது செய்தோம். ஆனால் கடந்த 2 மாதங்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. எங்களை பணியாற்ற விடுங்கள் அல்லது நீங்கள் பணியாற்றுங்கள். லஞ்ச ஒழிப்பு பிரிவை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் பணியாற்றுங்கள் என்றுதான் பிரதமரை கேட்கிறாம்.

பாஜகவுக்கு கடந்த தேர்தலில் 3 இடங்களை மட்டுமே மக்கள் கொடுத்தனர். ஆனால் அதன் பிறகு பாஜகவினர் பழிவாங்கும் அரசியலில் இறங்கிவிட்டனர். எங்கள் அரசின் வளர்ச்சித் திட்டங்களை எவ்வாறு முடக்கலாம் என்றே 24 மணி நேரமும் சிந்திக்கின்றனர்.

இவ்வாறு கேஜ்ரிவால் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x