Last Updated : 07 Aug, 2015 08:23 AM

 

Published : 07 Aug 2015 08:23 AM
Last Updated : 07 Aug 2015 08:23 AM

கர்நாடகத்தில் தொடரும் சோகம்: ஒரே நாளில் 6 விவசாயிகள் தற்கொலை - எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் அரசுக்கு கடும் நெருக்கடி

கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் 6 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டங்களினால் கர்நாடக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லை உள்ளிட்ட பல்வேறு காரணங்க ளினால் 200-க்கும் மேற்பட்ட விவசா யிகள் தற்கொலை செய்து கொண் டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் கர்நாடக முதல்வர் சித்தரா மையா மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விவசாயி களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார். விவசாயிகளுக்கு தொல்லைக் கொடுக்கும் கந்து வட்டிக்காரர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே விவசாயிகளின் தற்கொலையை கண்டித்து பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் தற்கொலையை சித்தராமையா தடுக்க தவறிவிட்ட தாக காங்கிரஸ் மூத்த தலைவர் களான எஸ்.எம்.கிருஷ்ணா, தரம்சிங் உள்ளிட்டோரும் போர்க் கொடி தூக்கியுள்ளதால் அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தொடரும் தற்கொலை

இந்நிலையில் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களை சேர்ந்த 6 விவசாயிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மண்டியா மாவட்டம் மத்தூர் அருகேயுள்ள மரசிங்கனஹள்ளி கிராம‌த்தை சேர்ந்த கரும்பு விவசாயி புட்டசாமி (45). இவர் அருகில் உள்ள தனியார் வங்கியில் ரூ.6 லட்சம் பயிர்க்கடன் பெற்றுள்ளார். விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த புட்டசாமி நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல பெலகாவி மாவட்டம் சிக்கோடியை சேர்ந்த‌ விவசாயி மாதகட்டே கவுடா (46), கூட்டுறவு வங்கியில் ரூ 3.5 லட்சம் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்த முடியாத தால் நேற்று அவர் தற்கொலை செய்துகொண்டார். யாதகிரி மாவட்டத்தை சேர்ந்த திம்மண்ணா குபேரா (49), விவசாய தேவைக்காக தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 4.8 லட்சம் கடன் பெற்றுள்ளார். வட்டியை செலுத்த முடியாததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

பீஜாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஹனசஞ்சே முஜாவர் (40), ராம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயண்ணா(55), ரெய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த துவந்தராயா (40) ஆகிய விவசாயிகளும் நேற்று தற்கொலை செய்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x