Published : 01 May 2020 09:59 PM
Last Updated : 01 May 2020 09:59 PM

லாக் டவுன் மேலும் நீட்டிப்பு: இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை நடமாட்டத்துக்குத் தடை; அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை நடவடிக்கைகளின் விவரம்

நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ் பிரச்சினைகளினால் மே 3-ம் தேதி வரையிலான லாக் டவுன் உத்தரவை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள முழு அறிக்கை வருமாறு:

''1.இந்தக் காலகட்டத்தில் கரோனா பாதிப்பு இடங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் என்று பிரிக்கப்பட்டதன் அடிப்படைகளில் அந்தந்த மண்டலங்களில் அனுமதிக்கப்படும் நடவடிக்கைகள், தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் எந்த மண்டலங்களுக்கும் பொருந்தக்கூடிய அனுமதிக்கப்பட்ட மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட விஷயங்கள் குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் விரிவாக விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

2.ஏப்ரல் 30, 2020 அன்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட கடிதத்தில் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என்று மண்டலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரிக்கப்பட்டதன் அளவுகோல்களையும் மாவட்டங்களையும் விரிவாகக் கூறியுள்ளது. இதில் பச்சை மண்டலங்கள் இன்று வரை ஒரு கரோனா வைரஸ் கூட ஏற்படாத இடம் அல்லது கடந்த 21 நாட்களில் ஒரு தொற்று கூட உறுதி செய்யப்படாத பகுதிகளாகும். சிவப்பு மண்டலங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகள் மொத்தமாக கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை , உறுதி செய்யப்பட்ட தொற்றுக்களின் இரட்டிப்பு விகிதம், மருத்துவப் பரிசோதனை எண்ணிக்கை, மற்றும் மாவட்டங்களிலிருந்து பெறப்படும் கண்காணிப்பு பின்னூட்டங்கள் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்.

இந்த வகையில் சிவப்பு மற்றும் பச்சை மண்டலங்களாக வகைப்படுத்தப்படாத பகுதிகள் ஆரஞ்சு மண்டலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. எவை பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மண்டலங்கள் என்பதை மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வாராந்திர அடிப்படையில் தெரிவிக்கும், அல்லது முன்கூட்டியே தேவைப்பட்டாலும் அளிக்கும். மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் பிரதேசங்களில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் கூடுதல் மாவட்டங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வகைப்பிரித்த சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களின் பட்டியலில் உள்ள எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது.

3. நாட்டில் உள்ள மாவட்டங்களில் தங்கள் எல்லைகளுக்குள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நகராட்சிகளைக் கொண்டிருக்கலாம். முனிசிபல் கார்ப்பரேஷன் பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி கூடுதல் காரணமாகவும், மக்கள் கூடும் சந்தர்ப்பங்கள் அதிகமிருப்பதாலும் மாவட்டத்தின் பிற பகுதிகளைக் காட்டிலும் நகராட்சிப் பகுதியில் கோவிட்-19 தொற்று அதிகமாகும் சந்தர்ப்பங்கள் அதிகம். இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் இந்த மாவட்டங்கள் இரண்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

1. முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு உட்பட்ட பகுதி
2. முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு எல்லைக்கு வெளியே உள்ள பகுதி.

இதில் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வெளியே உள்ள பகுதியில் கடந்த 21 நாட்களில் புதிய கரோனா தொற்று இல்லை எனில் ஒட்டுமொத்தமாக சிவப்பு, ஆரஞ்சு என்று பிரிக்கப்பட்ட வகைகளில் இது ஒரு கட்டம் குறைவாக அடையாளம் காணப்படும். அதாவது மாவட்டம் ஒட்டுமொத்தமாக சிவப்பு மண்டலம் என்று வகையில் இருந்தால் கடந்த 21 நாட்களாக கரோனா இல்லாத, முனிசிபல் கார்ப்பரேஷன் எல்லைக்கு வெளியே இருக்கும் பகுதி ஆரஞ்சு மண்டலமாகக் கருதப்படும்.

அல்லது மாவட்டம் மொத்தமாக ஆரஞ்சு மண்டலமாக இருந்தால் 21 நாட்கள் கரோனா இல்லாத முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு வெளியே உள்ள பகுதி பச்சை மண்டலமாகக் கருதப்படும். இப்படிப் பிரிப்பதன் மூலம் எச்சரிக்கையுடன் கூடிய பொருளாதார மற்றும் பிற நடவடிக்கைகள் இப்பகுதிகளில் அனுமதிக்கப்படும். ஆனால் புதிய கரோனா தொற்றுகள் ஏற்படாதவாறு உரிய எச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம், சமூக விலகல் உள்ளிட்டவை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இது முனிசிபல் கார்ப்பரேஷன் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

4. நாட்டில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு மண்டலங்களுக்குள் வரும் பகுதிகள் கட்டுப்படுத்துதல் மண்டலங்கள் என்று குறிக்கப்படுகிறது. இப்பகுதிகளில்தான் தொற்று நோய் பரவும் குறிப்பிடத்தகுந்த ஆபத்து உள்ளது. எவ்வளவு கரோனா நோயாளிகள் உள்ளனர், புவியியல் ரீதியான அதன் பரவல், அமலாக்க நோக்கங்களுக்காக தெளிவாகப் பிரிக்கப்பட்ட சுற்றுவட்டாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எவை கட்டுப்படுத்துதல் பகுதி என்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள அதிகாரிகள் குடியிருப்புவாசிகளிடம் ஆரோக்கிய சேது ஆப் 100% இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கட்டுப்படுத்துதல் மண்டலங்கள், தொற்றுத் தொடர்பு தடம் அறிதல், வீடு வீடாகக் கண்காணிப்பு நடைமுறைகள், தொற்று பாதித்தவர்கள் குறித்த இடர்ப்பாட்டு மதிப்பீடுகளின் படி வீட்டில் அல்லது தனிமை மையங்களில் தனிமைப்படுத்துதல் உள்ளிடட் கண்காணிப்பு நடைமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். சுற்றளவு கட்டுப்பாடும் கண்டிப்புடன் உறுதி செய்யப்பட வேண்டும். ஏனெனில் இப்பகுதிகளில் மக்கள் நடமாட்டம் உள்ளேயும் வெளியேயு இருத்தல் கூடாது. அதாவது மருத்துவத் தேவைகள், அத்தியாவசியப் பொருட்கள் நடவடிக்கைகள் தவிர இப்பகுதிகளில் மற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

5. புதிய வழிகாட்டு நெறிமுறைகளின் கீழ் குறிப்பிட்ட நடவடிக்கைகள் நாடு முழுவதும் தடைசெய்யப்பட்டவையாகும். இதில் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட அனைத்துக்கும் பொருந்தும். விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, மெட்ரோ ரயில்கள், சாலை வழியாக மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது, பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி மற்றும் பயிற்சி மையங்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள், மால்கள், உடற்பயிற்சி நிலையங்கள், விளையாட்டு வளாகங்கள், சமூக, அரசியல், கலாச்சார நிகழ்வுகளுக்காகக் கூடுதல், பொது வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. ஆனாலும் மத்திய உள்துறை விவகார அமைச்சகம் அனுமதியளித்த தேர்ந்தெடுக்கப்பட்ட சில நபர்களுக்கு வான்வழி, ரயில், சாலைப் போக்குவரத்துக்கு அனுமதி உண்டு.

6. புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மக்களின் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுக்காக சில வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது. இதன்படி அத்தியாவசியமில்லாத வேலைகளுக்காக வெளியில் செல்வது இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை கண்டிப்பாக தடை செய்யப்படுகிறது. இதற்கான உத்தரவுகளை சட்டத்தின் கீழ் அந்தந்தத அதிகாரிகள் பிறப்பிக்கலாம். அதாவது 144-ம் பிரிவு தடைச்சட்டம், ஊரடங்கு ஆகிய உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். அனைத்து மண்டலங்களிலும் அத்தியாவசியத் தேவை மற்றும் மருத்துவத் தேவைகள் நீங்கலாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்ட நாளைய நோய் இருப்பவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் வீடடங்கைக் கடைப்பிடிக்க வேண்டும். சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் புறநோயாளி மருத்துவமனைகள், கிளினிக்குகள் அனுமதிக்கப்படுகின்றன, ஆனால் அதே வேளையில் சமூக விலகல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம். ஆனால் இவையும் கூட நோய்க் கட்டுப்படுத்துதல் மண்டலங்களில் நடத்தப் பட முடியாது.

7. நோய்க்கட்டுப்படுத்தல் மண்டலங்களுக்கு வெளியே உள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளில் நாடு முழுதும் மொத்தமாக தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளுடன் மேலும் சில நடவடிக்கைகளும் தடை செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் சைக்கிள் ரிக்‌ஷாக்கள், ஆட்டோ ரிக்‌ஷாக்கள், டாக்சிகள், கேப்கள், உள் மாவட்ட, மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகள், முடிதிருத்தும் நிலையங்கள், சலூன்கள், ஸ்பாக்களுக்கு அனுமதி இல்லை.

8. சிவப்பு மண்டலங்களில் கட்டுப்பாடுகளுடன் சில நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு. தனி மனிதர்கள் மற்றும் வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. நான்கு சக்கர வாகனங்களில் ட்ரைவர் மற்றும் ஒரு பயணிக்கு அனுமதி இருசக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே பயணிக்கலாம், இருவர் கண்டிப்பாகப் பயணிக்கக் கூடாது. நகரப்பகுதிகளில் உள்ள தொழிற் நிறுவனங்கள், அதாவது சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள், தொழில் டவுன்ஷிப்கள் ஆகியவை இயங்க அனுமதி உண்டு. இது தவிர அத்தியாவசியப் பொருட்களான மருந்துகள், மருத்துவப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், இதற்கான மூலப்பொருட்கள், இடைநிலைப்பொருட்கள் உற்பத்திக்கு அனுமதி உண்டு.

அதேபோல் தொடர்ச்சியான உற்பத்தி நடைமுறை உள்ள யூனிட்கள் இதன் சப்ளை செயின்கள். ஐடி ஹார்டுவேர், ஷிப்ட் முறைப்படியும் சமூக விலகல் விதிமுறைகளுடன் கூடிய சணல் தொழிற்சாலை, பேக்கேஜ் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்துறை ஆகியவை அனுமதிக்கப்படுகிறது. நகர்ப்பகுதிகளில் கட்டுமானத் தொழில்களுக்கு அனுமதி. ஆனால் தொழிலாளர்கள் உள்ளூர்வாசிகளாகவும் கட்டுமான இடத்தில் தங்குபவர்களாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு அனுமதி இல்லை. புதுப்பிப்பு எரிசக்தித் திட்ட கட்டுமானத் தொழிலுக்கு அனுமதி உண்டு. நகரப்பகுதிகளில் மால்கள், சந்தைகள் மற்றும் சந்தை வளாகங்களில் அத்தியாவசியமல்லாத பொருட்களுக்கான கடைகளுக்கு அனுமதி இல்லை.

ஆனால் நகரங்களில் குடியிருப்பு வளாகங்களில் இருக்கும் அத்தியாவசிய மற்றும் பிற பொருட்கள் விற்பனைக் கடைகளுக்கும் அனுமதி உண்டு.

சிவப்பு மண்டலங்களில் அத்தியாசியப் பொருட்களுக்கு மட்டும் இ-காமர்ஸ் வர்த்தகத்துக்கு அனுமதி உண்டு. தனியார் அலுவலகங்கள் தேவைக ருதி 33% பணியாளர்களுடன் இயங்கலாம். மீதிப் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணி புரியலாம்.

அரசு அலுவலகங்கள் துணைச்செயலாளர் மற்றும் அதற்கும் மேல் பதவியில் உள்ளோர்களுடன் செயல்பட அனுமதி உண்டு, கூடுதல் பணியாளர்கள் தேவையென்றால் 33% ஊழியர்களைக் கொண்டு நடத்தலாம்.

பாதுகாப்பு மற்றும் செக்யூரிட்டி சேவைகள், மருத்துவம் மற்றும் குடும்ப நலன், போலீஸ், சிறைகள், ஊர்க்காவல் படை, சிவில் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் அவசரநிலை சேவைகள், பேரிடர் மேலாண்மை, இது தொடர்பான சேவைகள், தேசிய தகவல் மையம், கஸ்டம்ஸ் மற்றும் இந்திய உணவு கார்ப்பரேஷன், என்சிசி, நேரு யுவ கேந்திரா, நகராட்சி சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றிச் செயல்படலாம். பொதுச்சேவைகள் விநியோகம் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்குத் தேவையான ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

9. சிவப்பு மண்டலங்களில் நிறைய நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள், தொழிற்சாலைகள், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டங்கள், உணவுப்பதனிடும் தொழிற்சாலைகள், செங்கற்சூளைகள் ஆகியவை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர கிராமப்புறங்களில் ஷாப்பிங் மால்கள் நீங்கலாக அனைத்து வகையான கடைகளும் திறக்க அனுமதி உண்டு. அனைத்து வேளாண் நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றுக்கு முழு அனுமதி. இதில் உள்நாட்டு கடல் மீன் பிடிப்புகளுக்கும் அனுமதி, தோட்டத்தொழில்கள் அனைத்துக்கும் அனுமதி. அதாவது இதன் மார்க்கெட்டிங்குக்கும் அனுமதி. ஆயுஷ் உட்பட அனைத்து மருத்துவச் சேவைகளுக்கும் அனுமதி.

அதேபோல் நிதித்துறைகளில் வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், காப்பீடு, மூலதனச் சந்தை நடவடிக்கைகள், கடன் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி .

குழந்தைகளுக்கான இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பெண்கள், கணவரை இழந்த பெண்கள், ஆதரவற்றோர் ஆகியோருக்கான இல்லங்களுக்கு அனுமதி.

பொதுப்பயன்பாடுகளான மின்சாரம், நீர், துப்புரவு, கழிவு மேலாண்மை, தொலைத்தொடர்பு, இணையதளச் சேவைகளுக்கு அனுமதி. கூரியர் மற்றும் தபால் சேவைகளுக்கும் அனுமதி உண்டு.

10. சிவப்பு மண்டலங்களில் பெரும்பாலான வர்த்தக மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி. இதில் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகள், கால் சென்டர்கள், குளிர்ப்பதன ஸ்டோரேஜ், கிடங்குகள், தனியார் செக்யூரிட்டி மற்றும் வசதி நிர்வாகச் சேவைகள், சுய வேலைவாய்ப்பு நபர்கள் அளிக்கும் சேவைகள் ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு, ஆனால் முடி திருத்துவோருக்கு அனுமதியில்லை. அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தி அதாவது மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருந்துக் கடைகள், மருத்துவ உபகரணங்கள், இவற்றுக்கான மூலப்பொருட்கள், இடைநிலைப்பொருட்கள்; அதாவது தொடர்ச்சியான நடைமுறைகள் தேவைப்படும் உற்பத்தி யூனிட்கள் இதன் சங்கிலித் தொடர்களுக்கு அனுமதி உண்டு.

11. ஆரஞ்சு மண்டலங்களில் சிவப்பு மண்டலங்களில் அனுமதிக்கப்படும் வர்த்தக நடைமுறைகளுடன் டாக்சிகள் மற்றும் கேப்கள் ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு. அதாவது நான்கு சக்கர வாகனங்கள் என்றால் ஒரு ட்ரைவர் ஒரு பயணி, மாவட்டங்களுக்கு இடையே தனிநபர்கள், வாகனங்கள் இயக்கம் அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆரஞ்சு மண்டலங்களில் 4 சக்கர வாகனங்களில் ட்ரைவர் மற்றும் இருவர் பயணிக்கலாம். இருசக்கர வாகனங்களில் 2 பேர் பயணிக்க அனுமதி உண்டு.

12, பச்சை மண்டலங்களில் நாடு முழுதும் தடை செய்யப்பட்ட அனைத்து மண்டல தடை நடவடிக்கை நீங்கலாக மற்ற நடவடிக்கைகளுக்கு அனுமதி உண்டு. பச்சை மண்டலங்களில் 50% இருக்கை வசதிகளுடன் பேருந்துகள் இயக்கலாம். பேருந்து டெப்போக்களில் 50% ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

13. அனைத்து சரக்குப் போக்குவரத்துக்கும் அனுமதி உண்டு. அண்டைநாடுகளுடனான ஒப்பந்தங்களின் கீழ் வரும் சரக்குப் போக்குவரத்துகளை எந்த ஒரு மாநிலமோ,யூனியன் பிரதேசங்களோ தடுக்கக் கூடாது. இதற்கு தனிப்பட்ட பாஸ்கள், அனுமதிச்சீட்டுகள் தேவையில்லை.

14. மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநில கோவிட்-19 நிலவரங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளில் தேர்ந்தெடுத்த சில நடவடிக்கைகளை மட்டும் அனுமதிக்க தேவைப்பட்டால் முடிவெடுத்துக் கொள்ளலாம்.

15. மே மாதம் 3-ம் தேதி வரையிலான லாக் டவுன் உத்தரவுகளுக்கான வழிகாட்டுதல்களில் அனுமதிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு தனியான, புதிய அனுமதிகள் தேவையில்லை. இந்தியாவில் உள்ள அயல்நாட்டினருக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மத்திய உள்விவகார அமைச்சகத்தின் படித்தரமான செயல்முறை விதிமுறைகளின் கீழ் தொடரும். தனிமைப்படுத்தப்பட்டவர்களை விடுவித்தல், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் , யாத்திரிகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் பிறருக்கு உள்துறை விவகார அமைச்சக வழிமுறைகளின் படி ரயில் அல்லது சாலை வழியிலான போக்குவரத்து முடிவுகள் எடுக்கப்படும்.

16. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் லாக் டவுன் வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்தியாக வேண்டும். பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005-ன் கீழ் அளிக்கப்பட்டுள்ள இந்த வழிகாட்டுதல்களை நீர்த்துப் போகச் செய்யக் கூடாது''.

இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x