Last Updated : 18 Apr, 2020 04:01 PM

 

Published : 18 Apr 2020 04:01 PM
Last Updated : 18 Apr 2020 04:01 PM

ராகுலை அழைத்து மோடி பேச வேண்டும்; இக்கட்டான சூழலில் எதிர்க்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்துகிறார்: சிவசேனா பாராட்டு

பிரதமர் மோடியுடன் ராகுல் காந்தி : கோப்புப்படம்

மும்பை

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நாடு இக்கட்டான சூழலில் இருக்கும் போது ஒரு எதிர்க்கட்சி எவ்வாறு பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளிப்படுத்திவிட்டார் என சிவசேனா கட்சி பாராட்டியுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே கணித்து கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ராகுல் காந்தி மத்திய அரசை எச்சரித்து வருகிறார். அவ்வப்போது கரோனா எனும் சுனாமி வருகிறது என்றும், கரோனாவுக்கு பின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி வந்தார்.

இந்த சூழலில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் ராகுல் காந்தியைப் பாராட்டி தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில்கூறப்பட்டுள்ளது.

மக்கள் நலனில் அக்கறை கொண்டு, அரசியல் முதிர்ச்சியுடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். கரோனா வைரஸால் நாடு இக்கட்டான சூழலைச் சந்தித்து வரும் போது ராகுல் காந்தி துணிச்சலான ஆலோசனைகளையும், நேர்மறையான அணுகுமுறைகளையும் வெளிப்படுத்தி இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் எதிர்க்கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை வெளிப்படுத்திவிட்டார்

ராகுல் காந்தியிடம் சில கருத்துக்கள் இருக்கின்றன. பிரதமர் மோடியிடமும், அமித் ஷாவிடமும் கருத்துக்கள் இருக்கின்றன. இந்த கரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நேரத்தில் நாட்டின் நலனுக்காக ராகுல் காந்தியும், பிரதமர் மோடியும் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்த வேண்டும்

பாஜகவின் பாதி வெற்றி என்பது, ராகுல்காந்தியை விமர்சித்து, அவரின் மரியாதை சிதைக்கும் வகையில் பேசியதில்தான் கிடைத்தது. இது இன்னமும் தொடர்ந்து வருகிறது.

கரோனா வைரஸால் உருவாகும் பாதிப்புகளைப் பற்றி ராகுல்காந்தி முன்கூட்டியே கணித்து கூறினார், பலமுறை தொடர்ந்து மத்திய அரசை எச்சரித்து, எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசி வந்தார்.

ஆனால், ஒவ்வொருவரும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியை கவிழ்ப்பதிலேயே தீவிரமாக இருந்தார்கள். கரோனா வைரஸ் சிக்கல்களைக் கையாள மத்தியஅரசை விழிக்க வைக்க ராகுல் முயற்சித்தார்

அதுமட்டுமல்ல வெளிநாடுகளுக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யாதீர்கள் நம்நாட்டில் கரோனா நோயாளிகளுக்கு தேவைப்படும் என்று ராகுல் அடிக்கடி தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை பேசிய ராகுல் காந்தி, சண்டையிடுவதற்கு இது நேரமல்ல. பிரதமர் மோடியுடன் எனக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். அதற்கு இது நேரமல்ல. கரோனா வைரஸுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டிய நேரம். நாம் சண்ைடயிட்டால் போரில் தோற்றுவிடுவோம் என்று மீண்டும் தெரிவித்தார்

அதுமட்டுமல்லாமல் கரோனாவை ஒழிக்க லாக்டவுன் தீர்வல்ல, அது பாஸ்பட்டன் போன்றதுதான். லாக்டவுன் நீக்கப்படும் போது மீண்டும் கரோனா பரவத் தொடங்கிவிடும். மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடத்த வேண்டும். மக்களுக்கு முழுமையான மருத்துவ வசதிகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என ராகுல் வலியுறுத்தினார்

லாக்டவுன் நேரத்தில் நாம் கரோனாவை எதிர்கொள்ள முழுமையான திட்டம் தேவை. காந்தியின் கருத்துக்கள் மத்திய அரசுக்கு மிகப்பெரிய தெளிவைக் கொடுத்திருக்கும் நாட்டுக்கும் பயனளிக்கும். ராகுலின் கருத்துக்களை நாங்களும் கேட்டபின், பிரதமர் மோடி ராகுல் காந்திைய அழைத்து நேரில் ஒரு முறை கரோனா வைரஸ் தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்
இவ்வாறு சிவசேனா தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x