Published : 15 Apr 2020 10:30 PM
Last Updated : 15 Apr 2020 10:30 PM

கரோனா பரவல் தீவிரம்: 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்; தமிழகத்தில் 22; ஹாட் ஸ்பாட் இல்லாதவை 207

கோப்புப்படம்

புதுடெல்லி, 

நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதையடுத்து, வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் 170 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட்களாகவும், வைரஸ் பரவல் குறைவாக இருக்கும் 207 மாவட்டங்கள் ஹாட் ஸ்பாட் இல்லாதவையாகவும் மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

''நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதையடுத்து கரோனா வைரஸ் நோயாளிகள் அதிகமாக இருக்கும் ஹாட் ஸ்பாட் இடங்கள், மாவட்டங்கள், கரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் இடங்களை ஹாட் ஸ்பாட் இல்லாத இடங்களாகவும் வகைப்படுத்தக் கேட்டுள்ளோம். கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத இடங்கள் பச்சை மண்டலங்களாக அறிவிக்கப்பட உள்ளன.

ஒரு மாவட்டத்தில் அதிகமான கரோனா நோயாளிகள் இருப்பது, எண்ணிக்கை குறுகிய இடைவெளியில் அதிகரித்து வருவது ஆகியவற்றின் அடிப்படையில் ஹாட் ஸ்பாட் பிரிக்கப்படுகிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்த லாக் டவுன் காலத்தை மிகவும் தீவிரமாக பயன்படுத்திக் கொள்ள மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

மத்திய அரசுக்கு கிடைத்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் நாட்டில் உள்ள 700க்கும் மேற்பட்ட மாவட்டங்களை ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக அறிவித்துள்ளோம். 207 மாவட்டங்களில் கரோனா நோயாளிகள் இருந்தாலும் அவை ஹாட் ஸ்பாட்கள் இல்லை. இந்த 207 மாவட்டங்களிலும் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த தீவிரமான திட்டமிடல் அவசியம்.

நாட்டில் கரோனா வைரஸால் சமூகப் பரவல் இதுவரை இல்லை. சில இடங்களில் உள்ளூர் மக்கள், திரள் மூலம் மட்டுமே பரவுகிறது. அதற்குத் தீவிரமான தி்ட்டமிடலுடன் நடவடிக்கை எடுத்தால் கட்டுப்படுத்திவிடலாம்.

கரோனா வைரஸ் நோயாளிகள் இல்லாத மாவட்டங்களில், கரோனா வராமல் தடுப்படுதற்கான தி்ட்டங்களை மேற்கொள்ளலாம்.

கரோனா வைரஸின் இணைப்புச் சங்கிலியை உடைப்பதற்கு நோயாளிகளைக் கண்காணி்த்தல், அவர்களோடு தொடர்புடையவர்களைக் கண்காணித்தல், மருத்துவமனை மேலாண்மை ஆகியவை அவசியம். நாடு முழுவதும் இந்தத் திட்டங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியாகச் செயல்படுத்த மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.

அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், போலீஸ் டிஜிபிக்கள், சுகாதாரச் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள், நகராட்சி ஆணையர், முதல்வர்கள் ஆகியோருடன் அமைச்சரவைச் செயலாளர் ஹாட் ஸ்பாட் இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தி, களப்பணியில் கட்டுப்படுத்தும் திட்டங்கள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் இருக்கும் மண்டலங்களில் மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தவிர நடமாட்டத்துக்கு அனுமதியில்லை. புதிதாக நோயாளிகள் உருவாகிறார்களா என்பதை சிறப்புக் குழுக்கள் தொடர்ந்து கண்காணிக்கும். மாதிரிகள் எடுத்து ஆய்வு நடத்தப்படும். பரிசோதனைகள் செய்யப்படும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே இருக்கும் பகுதியில் தீவிர நுரையீரல் தொற்று நோய் இருப்பவர்கள் (சாரி), இன்ப்ளூயன்ஸா அறிகுறிகள் இருந்தால் பரிசோதிக்கப்படுவார்கள்.

170 ஹாட் ஸ்பாட் மாவட்டங்களில் தலைநகர் டெல்லி, மும்பையின் பல பகுதிகள், பெங்களூரு நகர்ப்புறம், ஹைதராபாத், சென்னை, ஜெய்ப்பூர், ஆக்ரா போன்ற நகரங்களும் அடங்கும்.

இவை தவிர தமிழத்தில் 22 ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக சென்னை, திருச்சி, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர்,தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகப்பட்டினம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன''.

இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x