Last Updated : 15 Apr, 2020 06:28 PM

 

Published : 15 Apr 2020 06:28 PM
Last Updated : 15 Apr 2020 06:28 PM

கரோனா போர் வீரர்கள்: பேறுகால விடுப்பை ரத்து செய்து பச்சிளங்குழந்தையை சுமந்து பணிக்குத் திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி

விசாகப்பட்டினத்தில் கைக்குழந்தையுடன் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீஜனா கும்மல்லா : படம் உதவி | ட்விட்டர்

ஹைதராபாத்,

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், போலீஸார், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியளர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் போர் வீரர்களாக மாறிச் செயல்பட்டு வருகிறர்கள்.

ஆனால், அனைவரும் பாராட்டும் வகையில் இளம் ஐஏஎஸ் அதிகாாரி ஒருவர் தன்னுடைய பேறுகால விடுப்பை ரத்து செய்துவிட்டு குழந்தை பெற்ற ஒரு மாதத்துக்குள் பச்சிளங்குழந்தையை கையில் ஏந்தி பணிக்குத் திரும்பியுள்ளார். அதுமட்டுமல்ல பிரசவ வலி ஏற்பட்டுபின் மருத்துவமனைக்குச் செல்லும்வரை, அலுவலகத்துக்கு வந்து அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி வேலை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2013-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியானவர் அதிகாரி ஸ்ரீஜனா கும்மல்லா. தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறார். கர்ப்பிணியாக இருந்த இவர், பேறுகால விடுப்பில் சென்றார். இவருக்குக் கடந்த மாதம் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது கரோனா வைரஸ் பரவிவரும் வேளையில் மக்கள் பணியாற்ற, 6 மாதகால விடுப்பைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்பியுள்ளார்.

இளம் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீஜனா கும்மல்லா தனது கைக்குழந்தையுடன் அலுவலகத்தில் பணியாற்றும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு அனைத்துத் தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீஜனா கும்மல்லா நிருபர்களிடம் கூறியதாவது:

“எனக்கு குழந்தை பிறந்த அன்றைய தினம் வரை நான் அலுவலகத்துக்குச் சென்றேன். இப்போது கரோனா வைரஸை எதிர்த்து நாடே போராடி வரும் போது நான் பேறுகால விடுப்பு எடுத்து வீட்டில் இருப்பது சரியாகப்படவில்லை.

ஆதலால் முதல்வரிடம் கேட்டு, எனது பேறுகால விடுப்பை ரத்து செய்து, மீண்டும் பணிக்குத் திரும்புகிறேன் என்றி தெரிவித்தேன். ஆனால், முதல்வர் முழுமையாக குணமடைந்தபின் வாருங்கள் என்றார். பிறகு, என்னுடைய விருப்பத்துக்குச் சம்மதித்து பணி செய்ய அனுமதித்தார்.

மனிதராகப் பிறந்துவிட்ட நிலையில் இதுபோன்ற அசாதாரண சூழலில் நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும். இதுபோன்ற நேரத்தில்தான் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் போது எனது குழந்தைக்குப் பாலூட்டி அழைத்து வந்துவிடுவேன்.

சில நேரங்களில் வெளியே கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்தால் வீட்டில் விட்டுவிடுவேன். 4 மணிநேரத்துக்கு ஒருமுறை வீட்டுக்குச் சென்று குழந்தைக்குப் பாலுட்டிவிட்டு அலுவலகத்துக்குத் திரும்புவேன்.

இதுபோன்ற இக்கட்டான தருணத்தில் பலர் பணமாக உதவுகிறார்கள், பொருளாக, உணவு அளித்து உதவுகிறார்கள். என்னால் முடிந்தது பேறுகால விடுப்பை விடுத்து, மக்களுக்குச் சேவை செய்வதுதான் உகந்தது என நினைத்தேன்”.

இவ்வாறு ஸ்ரீஜனா கும்மல்லா தெரிவித்தார்.

ஸ்ரீஜனாவின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும், ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு பாராட்டியுள்ளது. அந்த அமைப்பின் ட்விட்டரில, ஸ்ரீஜனா கும்மல்லா குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள் பணிக்கு வந்த இளம் அதிகாரிக்கு வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளது.

ஒரு மாதக் குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய ஸ்ரீஜனாவின் கடமை உணர்வை மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பாராட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x