Last Updated : 24 Aug, 2015 03:29 PM

 

Published : 24 Aug 2015 03:29 PM
Last Updated : 24 Aug 2015 03:29 PM

வரம்பு மீறிய இளைஞர்; கேள்விகேட்காத சமூகம்: ஃபேஸ்புக்கில் பகிரங்கப்படுத்திய டெல்லி மாணவி

சாலையில் தன்னிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட இளைஞரை ஃபேஸ்புக்கில் துணிகரமாக பகிரங்கப்படுத்தி இருக்கிறார் டெல்லியைச் சேர்ந்த மாணவி ஒருவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் 3-வது ஆண்டு பயின்று வரும் மாணவியின் இந்த துணிகர செயலுக்கு ஃபேஸ்புக்கில் அமோக வரவேற்பு கிடைத்தது மட்டுமல்லாமல், அந்த நபரின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீஸாரும் உத்தரவாதம் வழங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டெல்லி திலக் நகர காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஞாயிற்றுகிழமை இரவு 8 மணி அளவில் திலக் நகர சாலையில் மாணவி நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக சென்ற இளைஞர் மாணவியை அநாகரீகமாக தகாத வார்த்தைகளால் பேசினார். சாலையில் பலர் இருந்தபோது, எவரும் மாணவிக்கு ஆதரவாக அந்த நபரின் செயலை எதிர்த்து கேள்வி எழுப்பவில்லை.

அநாகரீகச் செயலை செல்ஃபோனில் பதிவு செய்து போலீஸில் புகார் அளிப்பதாக மாணவி மிரட்டியபோதும் அசராத அந்த நபர் தனது மோட்டார் சைக்கிள் அருகே நின்று, படம்பிடித்துக்கொள்ளும்படி பாவனை செய்துள்ளார்.

மேலும், போலீஸாரிடம் புகார் அளிக்கச் சென்றால், விபரீதத்தை சந்திக்க நேரிடும் என்று மாணவிக்கு அவர் மிரட்டலும் விடுத்தார்.

அதனை அப்படியே பதிவு செய்த மாணவி, இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்தார். ஆதாரத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிந்த மாணவி, அந்த நபரின் தவறான செயலை அம்பலமாக்கி உள்ளார்.

மாணவி அளித்த மோட்டார் சைக்கிள் எண் மற்றும் ஆதாரத்தைக் கொண்டு, அந்த இளைஞர் அதே திலக் நகரைச் சேர்ந்த திலீப் சிங் என்று போலீஸார் கண்டறிந்துள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை விரைவில் கைது செய்ய உள்ளதாக டெல்லி காவல்துறையின் மூத்த போலீஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தமிழில்: க.பத்மப்ரியா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x