Last Updated : 12 Mar, 2020 05:13 PM

 

Published : 12 Mar 2020 05:13 PM
Last Updated : 12 Mar 2020 05:13 PM

உன்னாவ் வழக்கு: நான் தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள், என் கண்களில் ஆசிட் வீசுங்கள்- டெல்லி நீதிமன்றத்தில் செங்கார் பரபரப்பு

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் வழக்கத்துக்கு விரோதமான வாதமாக பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், வியாழனன்று டெல்லி நீதிமன்றத்தில் தான் தவறு செய்திருந்தால் தூக்கிலிடுமாறும் தன் மீது ஆசிட் வீசுமாறும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தந்தையைக் கொலை செய்த குற்றம் தொடர்பான விசாரணையின் போது செங்கார் இவ்வாறு கூறினார்.

ஏப்ரல் 9, 2018-ல் உன்னாவ் பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்டவரின் தந்தை நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட செங்கார் தன் சார்பாக வாதாடினார். மாவட்ட நீதிபதி தர்மேஷ் ஷர்மா முன்பு தனக்கும் இதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று கதறினார்.

“எனக்கு நீதி வழங்குங்கள் அல்லது தூக்கிலிடுங்கள், என் கண்களில் ஆசிட் வீசுங்கள், நான் தவறு செய்திருந்தால் இதைச் செய்யுங்கள்” என்று நீதிபதியிடம் கூறினார்.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவரின் தந்தை தொடர்பான இந்த வழக்கில் செங்கார் மற்றும் 7 பேர் குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பளித்தது. அதன் தண்டனை விவரங்களை அறிவிக்கும் விசாரணையில்தான் செங்கார் இவ்வாறு தெரிவித்தார்.

2017 உன்னாவ் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் தேதி செங்கார் தன் மீதி ஆயுளை சிறையிலேயே தண்டனையாகக் கழிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இது தனி வழக்கு.

இன்றைய விசாரணையின் போது குற்றவாளி செங்காரிடம் நீதிபதி கூறும்போது, நீங்கள் ஏற்கெனஎ குற்றவாளிதான், எனவே பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவலில் அடித்துத் தாக்கப்படும் போது போலீஸாருடன் செங்கார் தொடர்பில் இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கிறது என்றார். இதற்கு செங்கார் தனக்கு இரண்டு மகள்கல் இருக்கிறார்கள் என்னை விட்டு விடுங்கள் என்றார்.

ஆனால் நீதிபதியோ, “உங்களுக்கு மட்டுமா குடும்பம் இருக்கிறது, அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது. குற்றம் செய்வதற்கு முன் இதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் சட்டங்கள் அனைத்தையும் உடைத்திருக்கிறீர்கள். இப்போது வந்து அனைத்தையும் மறுப்பீர்களா? எதுவரை உங்களால் மறுக்க முடியும்?” என்று நறுக்கென கேட்டார்.

இந்த வழக்கில் செங்கார் மற்றும் 2 போலீஸார், மாக்கி காவல் நிலைய அதிகாரி அசோக் சிங் பாதுரியா பிறகு சப் இன்ஸ்பெக்டர் கே.பி.சிங் ஆகியோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ கோரியது.

இந்தப் போலீஸ் அதிகாரிகள் சதியின் உள்கை எனவே இவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ வாதாடியது, தண்டனை குறித்து நாளை வெள்ளிக்கிழமையும் விசாரணை நடைபெறும்.

இந்த வழக்கில் சந்தேகத்தின் பலனை அளித்து கோர்ட் கான்ஸ்டபிள் அமீர் கான், ஷைலேந்திர சிங், ராம் ஷரண் சிங் மற்றும் ஷரத்வீர் சிங் ஆகியோரை விடுவித்தது.

ஏப்ரல் 3, 2018 அன்று பாலியல் பலாத்கார பாதிப்பு பெண்ணின் தந்தை மற்றும் ஷஷி பிரதாப் சிங் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தந்தையும் இவரது சக ஊழியரும் வேலையிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது ஷஷி பிரதாப் சிங்கிடம் லிஃப்ட் கேட்டதாகவும் ஷசி அதற்கு மறுத்ததாகவும் இதனால் இருதரப்பினருக்கும் சண்டை மூண்டதாகவும் சிபிஐ குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சண்டையை அடுத்து ஷஷி தன் கூட்டாளிகளை அழைத்திருக்கிறார். இதனையடுத்து குல்தீப் செங்காரின் சகோதரர் அடுல் சிங் செங்கார் சம்பவ இடத்துக்கு விரைய உன்னாவ் பலாத்கார சிறுமியின் தந்தையைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து அடிவாங்கிய தந்தையை காவல் நிலையம் அழைத்துச் சென்று அவர் மீது எஃப்.ஐ.ஆர் போடப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதே நேரத்தில் பலாத்காரக் குற்றவாளியான குல்தீப் செங்கார் மாவட்ட போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளர், பிறகு அடி வாங்கிய தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடமும் செங்கார் பேசியுள்ளார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் உ.பி. விசாரணை நீதிமன்றத்திடமிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

ஜூலை 2019-ல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தன் குடும்ப உறுப்பினர்க்ளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்று காரில் மோதையது, இதில் அந்தப் பெண்ணின் 2 அத்தைகள் பலியாகினார், படுகாயமடைந்த பாதிக்கப்பட்ட பெண் லக்னோவிலிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். தற்போது பாலியல் பாதிப்புப் பெண்ணான இவருக்கு டெல்லியில் வசிப்பிடம் வழங்கப்பட்டுள்ளது, இவர் சிஆர்பிஎஃப், பாதுகாவலில் இருந்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x