Last Updated : 12 Mar, 2020 02:51 PM

 

Published : 12 Mar 2020 02:51 PM
Last Updated : 12 Mar 2020 02:51 PM

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு தப்புமா? மார்ச் 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர பாஜக திட்டம்

மத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், வரும் 16-ம் தேதி காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக கோர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்தியப் பிரதேச அரசியலில் பெரும் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் கமல்நாத்துக்கும், மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உட்கட்சி மோதலால் அவர் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சிந்தியாவின் ஆதரவாளர்கள் 22 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்தார்கள்.

இதனால், 228 உறுப்பினர்கள் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 206 ஆகக் குறைந்தது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 95 உறுப்பினர்களும் உள்ளனர்.

பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 95 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சி தன்னிடம் இருக்கும் 95 எம்எல்ஏக்களையும் பாஜகவின் குதிரை பேரத்துக்குப் பயந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த சூழலில் சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் சூழல் ஏற்பட்டால் கமல்நாத் அரசு தப்பிக்குமா அல்லது கவிழுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரில் தங்களுக்கு 12 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவிப்பார்கள், வாக்கெடுப்பு நடக்கும்போது அதிசயம் நிகழும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோதிராதித்ய சிந்தியா : கோப்புப் படம்.

இதனிடையே மைனாரிட்டி அரசாக இருக்கும் கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக கோரும் என்ற கேள்வி எழுந்த நிலையில் வரும் 16-ம் தேதி அதற்கான வாய்ப்புகள் உள்ளதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன

இதுகுறித்து மத்தியப் பிரதேச சட்டபேரவை கொறடா நரோட்டம் மிஸ்ரா நிருபர்களிடம் இன்று கூறுகையில், " தற்போது கமல்நாத் அரசு மைனாரிட்டி அரசாக இருக்கிறது. ஆளுநரிடம் சென்று சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கமல்நாத்துக்கு உத்தரவிடக் கோருவோம்.

அநேகமாக வரும் 16-ம் தேதி கமல்நாத் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பார். அன்றுதான் பட்ஜெட் தாக்கலும் செய்யப்படுகிறது. 22 எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதம் ஆளுநரிடமும், சபாநாயகரிடமும் இருக்கிறது. அவர்கள் தான் அதுகுறித்து முடிவு செய்வார்கள். தற்போதுள்ள சூழலில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x