Last Updated : 07 Mar, 2020 03:04 PM

 

Published : 07 Mar 2020 03:04 PM
Last Updated : 07 Mar 2020 03:04 PM

'பொறுப்பு முக்கியம்; ஊடகச் சுதந்திரத்துக்கு மோடி அரசு மதிப்பளிக்கிறது': ஜவடேகர் கருத்து

ஊடகச்சுதந்திரத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு மதிப்பளிக்கிறது, அதேசமயம், ஊடகங்களுக்கு பொறுள்ள சுதந்திரமும் முக்கியம் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
கருத்துத் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பாக மலையாளத்தில் ஒளிபரப்பாகும் மீடியா ஒன், ஏசியாநெட் நியூஸ் ஆகிய இரு சேனல்கள், வகுப்பு வாதத்தைத் தூண்டும் விதத்தில் செய்திளை ஒளிபரப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் செய்திகளை ஒளிபரப்பிய ஏசியாநெட் நியூஸ், மீடியா ஒன் ஆகிய இரு சேனல்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி வரை ஒளிபரப்புத் தடை விதித்து மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால், நள்ளிரவே இரு சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

புனேயில் இன்று நிருபர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார். அப்போது இரு சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடையும், நீக்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளித்தாவது:

" பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஊடகச்சுதந்திரத்துக்கும், பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் அதிகமான மதிப்பளிக்கிறது, ஆதரவளிக்கிறது. இந்த விஷயத்தை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிரதமர் மோடி மிகுந்த வேதனைப்பட்டார்.

ஊடகங்களுக்குச் சுதந்திரம் முக்கியம் என்பதை மத்திய அரசு ஆதரிக்கிறது, அந்த சுதந்திரம் பொறுப்புள்ளதாக இருத்தல் வேண்டும்.

கேரளாவில் உள்ள இரு சேனல்களுக்கு 48 மணிநேரம் தடைவிதிக்கப்பட்டது. ஆனால், அது குறித்து அறிந்தவுடன் உண்மையில் என்ன நடந்தது என அறிந்து கொண்டு, உடனடியாக இரு சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை இரவு ஏசியாநெட் சேனலின் உரிமையாளரிடம் பேசிய பின்பு அந்த சேனலுக்கான ஒளிபரப்பு மீண்டும் வழங்கப்பட்டது, அதேபோல மீடியா ஒன் சேனலின் உரிமையாளரிடம் பேசிவிட்டு அந்த ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்டது.

ஜனநாயக அடிப்படையில் பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக அவசியம் என்பது எங்களின் அடிப்படை சித்தாந்தம், மோடி அரசு ஊடகச் சுதந்திரத்தை உறுதி செய்யக் கடமைப்பட்டுள்ளது.

நாட்டில் அவசரநிலை அமலில் இருந்தபோது, பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் பத்திரிகை சுதந்திரத்துக்காகச் சிறை சென்றோம் ஆதலால் ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாப்போம்.

இந்த விவகாரத்தில் நிச்சயம் நான் ஆய்வு செய்வேன், ஏதேனும் தவறு நடந்திருந்தால், நிச்சயம் அத்தியாவசியமான நடவடிக்கை எடுக்கப்படும். அதேசமயம், ஒவ்வொருவருக்கும் பொறுப்புள்ள சுதந்திரம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பின்(என்பிஏ) தலைவர் ராஜாத் ஷர்மாவிடம் இதுதொடர்பாக பேசி இருக்கிறேன். நிச்சயம் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்படும் " .

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x