Last Updated : 24 Feb, 2020 09:56 PM

 

Published : 24 Feb 2020 09:56 PM
Last Updated : 24 Feb 2020 09:56 PM

ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குகிறதா அதானி குழுமம்?

ரூ.60 ஆயிரம் கோடி கடனில் சிக்கியிருக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை அதானி குழுமம் வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2018-ம் ஆண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீதப் பங்குகளை விற்பனை செய்து நிர்வாகத்தைத் தனியாருக்கு மாற்ற மத்திய அரசு அறிவிப்பு செய்தது. ஆனால், யாரும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் 100 சதவீதப் பங்குகளையும், ஏஐ-எஸ்ஏடிஎஸ் கூட்டு நிறுவனத்தில் உள்ள 50 சதவீதப் பங்குகளையும் விற்பனை செய்ய கடந்த ஜனவரி 27-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.

ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்குச் சேர்ந்து தற்போது ரூ.60 ஆயிரத்து 74 கோடி கடன் இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கு மிகப்பெரிய நிறுவனங்கள் ஏதும் இன்னும் விண்ணப்பம் அளிக்கவில்லை. இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்பம் தொடர்பான ஆலோசனைகளை அதானி குழுமம் நடத்தியுள்ளதாகவும், அது தொடக்க நிலையில் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை அதானி குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்கான விருப்பத்தை அளிக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய திருப்பமாகப் பார்க்கப்படும். ஏற்கெனவே அதானி நிறுவனம் சமையல் எண்ணெய், உணவு, சுரங்கம், தாதுப்பொருட்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர சில மாநிலங்களில் விமான நிலையத்தைப் பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக அகமதாபாத், லக்னோ, ஜெய்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையப் பராமரிப்பு ஒப்பந்தத்தையும் அதானி எடுத்துள்ளது. இந்த சூழலில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க அதானி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் நிறுவனம் சார்பில் தொடர்புகொண்டு அதானி நிறுவனத்திடம் கேட்டபோது அதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.2.10 லட்சம் கோடியை முதலீட்டு விலக்கல் மூலம் திரட்டத் திட்டமிட்டுள்ளது. அதில் ஏர் இந்தியா நிறுவனம் மூலம் கிடைக்கும் முதலீட்டு விலக்கல் பணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x