'நான் கோயிலுக்குச் சென்றதால் புனிதம் கெட்டுவிட்டதா, என்ன மாதிரி அரசியல் செய்கிறார்கள்?' பாஜக மீது கேஜ்ரிவால் பாய்ச்சல்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : படம் ஏஎன்ஐ
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

நான் கோயிலுக்குச் சென்றதால் புனிதம் கெட்டுவிட்டதாக பாஜகவினர் கூறுவது என்ன மாதிரியான அரசியல், கடவுள் முன் அனைவரும் சமம் தானே என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார்.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து வருகிறது. 140 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள், களத்தில் 652 வாக்காளர்கள் உள்ளனர். காலையில் இருந்தே டெல்லியில் வாக்குப்பதிவு மையங்களில் மக்கள் ஆர்வத்துடன் நீண்டவரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அவரின் மனைவி சுனிதாவுடன் டெல்லி கன்னாட் பேலஸ் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அந்த வழிபாட்டை பாஜகவினர் கிண்டல் செய்ததால் கேஜ்ரிவால் கடும் அதிருப்தி அடைந்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் .

அரவிந்த் கேஜ்ரிவால் கோயிலுக்குச் சென்றது குறித்து டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கூறுகையில், " போலி பக்தர்கள் கோயிலுக்குச் செல்கிறார்களே, என்ன நடந்தது. முதல்வர் கேஜ்ரிவால் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றாரா அல்லது அனுமனின் புனிதத்தைக் கெடுக்கச் சென்றாரா. அவரின் காலில் உள்ள ஷூக்களை அகற்றிய அதே கைகளோடு, பூக்களையும் எடுத்துச் செல்கிறார். போலியான பக்தர்கள் மட்டுமே இவ்வாறு கடவுளை வழிபடுவார்கள். நான் கோயில் அர்ச்சகரிடம் கேட்டேன். அவர் அனுமன் தொடர்ந்து இருமுறை குளிக்கவைக்கப்பட்டார் எனத் தெரிவித்தார்" எனத் தெரிவித்தார்

இந்நிலையில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி கிண்டலுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் கேஜ்ரிவால் ட்விட்டரில் கருத்துப்பதிவிட்டுள்ளார். அதில், " நான் தொலைக்காட்சியில் அனுமன் மந்திரத்தைப் பாடியதில் இருந்து என்னை பாஜகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள். நேற்று நான் அனுமன் கோயிலுக்குச் சென்றதைக்கூடக் கிண்டல் செய்துள்ளார்கள்.

நான் கோயிலுக்குச் சென்றதால் அந்த கோயிலின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறுகிறார்கள். என்ன மாதிரியான அரசியல் செய்கிறார்கள். கடவுள் அனைவருக்கும் பொதுவானவர், அனைவருக்கும் ஆசி வழங்கக்கூடியவர். பாஜகவில் ஒருவர் இருந்தாலும் அவருக்கும் ஆசி வழங்குவார்" எனத் தெரிவித்துள்ளார்

கடந்த 4-ம் தேதி நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய உ.பி. முதல்வர் ஆதித்யநாத், " கேஜ்ரிவால்கூட அனுமன் மந்திரத்தை உச்சரிக்கத் தொடங்கிவிட்டார். இனிவரும் காலங்களில் ஒவைசிகூட இதே போலத்தான் பாடுவார். இது நடக்கும்" எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது

தவறவிடாதீர்..

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in