

முன்பு செல்வந்தராக இருந்த ரிலையன்ஸ் தொலைத் தொடர்பு குழுமத் தலைவரான தொழிலதிபர் அனில் அம்பானிக்கு தற்போது சொத்து ஏதும் இல்லை என்று அவருடைய வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சீனாவைச் சேர்ந்த மூன்று வங்கிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் (680 மில்லியன் டாலர்கள்) அளவுக்கு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. கடன் கொடுத்த நிறுவனங்கள் அனில் அம்பானி மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளன. நேற்று இந்த வழக்கின் விசாரணையின் போது அனில் அம்பானியின் மகன் அன்மோல் ஆஜராகியிருந்தார்.
தி இன்டஸ்ட்ரியல் அண்ட் கமர்ஷியல் பேங்க் ஆஃப் சீனா, மும்பை கிளை, சீனா வளர்ச்சி வங்கி, எக்சிம் பேங்க் ஆகியவை இந்த வழக்கை லண்டன் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளன.
925 அமெரிக்க டாலர்கள் கடனுக்கான சொந்த கியாரண்டியை அவர் தரவில்லை என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது, ஆனால் அனில் அம்பானி தான் அவ்வாறு எந்த ஒரு கியாரண்டியையும் வழங்கவில்லை என்று மறுதலித்தார்.
அனில் அம்பானி சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், பணத்தை திரும்ப செலுத்தும் வகையில் அவருக்கு சொத்து இல்லை, 2012-ல் 7 பில்லியன் டாலர்களகா இருந்த அவரது முதலீடுகள் தற்போது 89 மில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது, அவரது கடன்களை கணக்கில் கொண்டால் அவரது நிகர மதிப்பு இப்போது பூஜ்ஜியம்தான் சுருக்கமாகக் கூற வேண்டுமெனில் அவர் ஒரு காலத்தில் சொத்து மிகுந்த தொழிலதிபர்தான் ஆனால் இப்போது இல்லை என்று தெரிவித்தனர்.
வங்கிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அனில் அம்பானியின் ஆடம்பர வாழ்க்கை முறையை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டார். 11 ஆடம்பர, சொகுசுக் கார்கள், ஒரு தனி விமானம், விசைப்படகு, தெற்கு மும்பையில் சொகுசு பங்களா என்று வாதாடினார்.
இதற்கு நீதிபதி ‘இந்தியாவில் அனில் அம்பானி திவால் நோட்டீஸ் ஃபைல் செய்தாரா?’ என்று கேட்டார்.
இந்த வழக்கில் தம்மால் பணம் தர இயலாது என்ற அனில் அம்பானியின் வாதங்களை நீதிபதி நிராகரித்துள்ளார்.
சுமார் 715 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை ஆறுவார காலத்துக்குள் செலுத்த நீதிபதி டேவிட் வாக்ஸ்மேன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
தவறவிடாதீர்!