Last Updated : 08 Feb, 2020 12:31 PM

 

Published : 08 Feb 2020 12:31 PM
Last Updated : 08 Feb 2020 12:31 PM

டெல்லியின் வயதான பெண்: 111 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி; பிரியங்கா, சோனியா வாக்களிப்பு

111 வயதான மூதாட்டி மண்டல் வாக்களித்த காட்சி : படம் ஏஎன்ஐ

புதுடெல்லி

டெல்லியில் விறுவிறுப்பாக நடந்துவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 111 வயது மூதாட்டி ஒருவர் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துச் சென்றார்.

காலை 11 மணி நிலவரப்படி டெல்லியில் 14.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடந்து வருகிறது. 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்த வாக்களிக்க வந்த காட்சி : படம் ஏஎன்ஐ

அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வந்து வாக்களித்தனர்.

இதில் டெல்லியில் உள்ள 111 வயதான மண்டல் எனும் மூதாட்டி சிஆர் பார்க் வாக்குப்பதிவு மையத்தில் தனது பேரனுடன் வந்து வாக்களித்தார். சக்கர நாற்காலியில் அமரவைத்து அழைத்துவரப்பட்ட மண்டல், வாக்களித்த பின் பத்திரிகையாளர்களிடம் கைகளைக் காட்டி உற்சாகப்படுத்தினார்

111 வயதாகும் மண்டல் டெல்லியில் உள்ள மிக வயதான பெண் ஆவார். டெல்லியில் மொத்தம் 132 பேர் 100 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 68 பேர் ஆண்கள், 64 பேர் பெண்கள். இதில் மிக வயதானவர் மண்டல் என்பது குறிப்பிடத்தக்கது

வாக்களித்த பின் மூதாட்டி மண்டல் நிருபர்களிடம் கூறுகையில், " இந்த தேர்தலிலும் நான் வாக்களித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எத்தனைத் தேர்தலில் நான் வாக்களித்தேன் என்பது எனக்கு மறந்துவிட்டது, ஆனால் பொறுப்புள்ள குடிமகனாக நாம் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். மற்ற குடிமக்களும் வந்து கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்களிக்க வந்த காட்சி : படம் ஏஎன்ஐ

பிரிக்கப்படா இந்தியாவில் பாரிசல் பகுதியில் 1908-ம் ஆண்டு பிறந்தவர் மண்டல். தற்போது பாரிசல் பகுதி வங்கதேசத்தில் உள்ளது. 111 வயதான மண்டல் இந்தியாவில் பல்வேறு கொந்தளிப்பான சம்பவங்களைப் பார்த்துள்ளார், குறிப்பாக இரு பிரிவினைகளைப் பார்த்து இருமுறை அகதிகளாக வாழ்ந்து பின்னர் இந்தியக் குடிமகள் அந்தஸ்து பெற்றார். கடந்த 100 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் மண்டல் பங்கேற்று வாக்களித்துள்ளார்.

111 வயதான மண்டலை, அவரின் இல்லத்தில் இருந்து துணைத் தேர்தல் அதிகாரி அழைத்து வந்தார். அதுகுறித்து துணைத் தேர்தல் அதிகாரி ஹரிஸ் குமார் கூறுகையில், " 111 வயதான மூதாட்டி மண்டலை நான் வாக்குப்பதிவு செய்ய அழைத்து வந்தது எனக்கு ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்த முதிய வயதில் மண்டல் வாக்களிக்க வந்தது அனைத்து மக்களும் உற்சாகத்தை அளிக்கும்" எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x