Last Updated : 06 Feb, 2020 05:44 PM

 

Published : 06 Feb 2020 05:44 PM
Last Updated : 06 Feb 2020 05:44 PM

கடனில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.882 கோடி பாக்கி; பிரதமர், குடியரசு தலைவர் பயணக் கட்டணம் செலுத்தவில்லை

ரூ.60 ஆயிரம் கோடி கடனில் சிக்கியிருக்கும் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு விவிஐபிக்களான பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக்குடியரசு தலைவர் ஆகியோர் பயணம் செய்த விமானக் கட்டணம் ரூ.882 கோடியை அந்த துறைகள் செலுத்தவில்லை எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

விமானப்படையின் ஒய்வு பெற்ற கமாண்டர் லோக்கேஷ் பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்து இந்தத்தகவல்களைத் திரட்டியுள்ளார்.

விவிஐப்பிகள் எனப்படும் பிரதமர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோர் பயணிக்க தனியாக விமானங்கள் உண்டு. இந்த விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்கினாலும் அதற்குரிய கட்டணத்தை அரசு வழங்க வேண்டும். அந்த வகையில் ரூ.882 கோடி செலுத்தவில்லை.

ஆர்டிஐ மனுவில் கிடைத்த தகவலின்படி, " ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 2019, நவம்பர் 30-ம் தேதி நிலவரப்படி விவிஐபி-க்களை அழைத்துச்செல்லும் விமானங்களுக்கான கட்டணம் ரூ.822 கோடி நிலுவையில் இருக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்தது வகையில் ரூ.9.67கோடி, வெளிநாட்டினர் பயணத்துக்கு ரூ.12.65 கோடி நிலுவையில் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அரசு அதிகாரிகள் சார்பில் 2019, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ.526.19 கோடிக்கு விமான டிக்கெட்டுகளை அரசு அதிகாரிகள் கடனாகப் பெற்றுள்ளனர். அதில் ரூ.236க கோடி கடந்த 3ஆண்டுகளாகச் செலுத்தப்படாமல் இருக்கிறது. இதில் ரூ.281.82 கோடி மீட்க முடியாத தொகையாகவே பார்க்கிறோம் என விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது

இதற்கிடையே கடனுக்கு டிக்கெட் வாங்குவது அதிகரித்து வருவதையடுத்து, அரசு அதிகாரிகளுக்குக் கடனுக்கு விமான டிக்கெட் வழங்கும் முறையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏர் இந்தியா நிறுவனம் நிறுத்தியது. ஏராளமான கோடிகள் நிலுவையில் இருப்பதால் கடனுக்கு டிக்கெட் வழங்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது

சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை, புலனாய்வுப் பிரிவு, சிஆர்பிஎப், தபால் துறை, ரிசர்வ் வங்கி ஆகியவைதான் அதிகமான நிலுவைத் தொகையை வைத்துள்ளனர்.

2019, டிசம்பர் 5-ம் தேதி நிலவரப்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மட்டும் ரூ. நிகர இழப்பீடு ரூ.8,556.35 கோடியாகும். ஒட்டுமொத்த கடன் தொகை ரூ.60 ஆயிரம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. ஆனால், வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.

தவறவிடாதீர்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x