

தன் பேரனாக நினைத்து, பழங்குடியினச் சிறுவனை அழைத்து காலணியைக் கழற்ற வைத்ததாக, வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் புத்துணர்வு முகாம் இன்று (பிப்.6) தொடங்கியது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முகாமைத் தொடங்கி வைக்க முதுமலை வந்தார். முகாம் தொடங்கி வைக்கும் முன்னர் அங்குள்ள கோயிலில் பூஜைக்கு அழைக்கப்பட்டார்.
கோயிலுக்குள் செல்வதற்காக காலணியைக் கழற்ற முனைந்தார். அப்போது, அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பழங்குடியினச் சிறுவனை அழைத்தார். ஏதாவது கேட்க அழைக்கிறார் எனத் தயங்கிய சிறுவனை, தனது காலணியைக் கழற்றி விடச் சொன்னார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, வனத்துறை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாது நின்றிருந்தனர். இதைப் பார்த்த குன்னூர் எம்எல்ஏ சாந்தி ராமு, பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்து விடாதபடி மறைத்து நின்றுகொண்டார்.
வனத்துறை அமைச்சரின் இந்தச் செயல் அங்கிருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. குழந்தைகள் நல ஆர்வலர்களிடையே அமைச்சரின் சர்ச்சையான செயல் விவாதப் பொருளானது.
இந்நிலையில், இது தொடர்பாக, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு விளக்கம் அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "கோயிலுக்குப் போக வேண்டும் எனச் சொன்னார்கள். அங்கு இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். பார்ப்பதற்கு என்னுடைய பேரன்கள் போன்று இருந்தனர். அவர்களை அழைத்து கழட்டி விடச் சொன்னேன். அவ்வளவுதான். அதற்கு வேறு சாயம் பூசுகின்றனர். அவையெல்லாம் பொய். என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் உள்நோக்கம் ஏதும் கிடையாது.
சிறிய பிள்ளைகளாக இருந்ததால்தான் உதவியாளர்களிடம் சொல்லாமல் அவர்களிடம் சொன்னேன். என்னுடைய பேரனாக நினைத்துச் சொன்னேன். இதனை விவாதப் பொருளாக்குவது அவரவர்களின் கண்ணோட்டம். என் பேரன் தான் அவன். இதில் தவறு ஏதும் இல்லை" எனத் தெரிவித்தார்.
தவறவிடாதீர்