

மத்திய பட்ஜெட் குறித்து தவறான கண்ணோட்டத்தை மக்களிடம் பரப்ப முயற்சிகள் நடக்கின்றன என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று டெல்லியில் நடந்தது. இதில் எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு இந்தக் கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் எம்.பி.க்கள் நாடாளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் குறித்து மக்களிடம் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், மந்தமான உலகப் பொருளாதாரச் சூழலிலும், இப்படி ஒரு சிறந்த பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் திரிபுராவின் புரு-ரியாங் பிரிவு மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட போடோ ஒப்பந்தம் கடந்த 10 ஆண்டுகளில் அரசின் முக்கியச் சாதனைகளில் ஒன்றாகும். கடந்த பல ஆண்டுகளாக வடகிழக்குப் பகுதிகளில் கலவரத்தையும், வன்முறையையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி வந்த சூழலில் இந்த ஒப்பந்தம் அமைதியை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
அப்போது பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசுகையில், "டெல்லியில் வரும் 8-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் பாஜக அமோக வெற்றி பெறும். கட்சியின் 240 எம்.பி.க்களும் டெல்லி தேர்தலில் தங்கள் நேரத்தைச் செலவு செய்து பிரச்சாரம் செய்துள்ளனர். ஏழை மக்கள் வாழும் பகுதிக்குச் சென்று மத்திய அரசின் திட்டங்களை விவரித்து பிரச்சாரம் செய்தனர்" எனத் தெரிவித்தார்.