

பாஜக எம்.பி. அனந்தகுமார் ஹெக்டே மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை நண்பகல் வரை மக்களவைத் தலைவர் ஒத்திவைத்தார்
பெங்களூருவில் சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் உத்தர கன்னட தொகுதி பாஜக எம்.பி.யுமான அனந்தகுமார் ஹெக்டே பேசுகையில், "மகாத்மா காந்தி நடத்திய சுதந்திரப் போராட்டம் ஒரு நாடகம். ஒட்டுமொத்த சுதந்திரப் போராட்டம் முழுவதுமே, ஆங்கிலேயர்களின் அனுமதியுடன், ஆதரவுடன் நடத்தப்பட்டது.
தலைவர்கள் என அழைக்கப்படக் கூடியவர்கள் யாரேனும் போலீஸாரால் ஒருமுறையாவது தாக்கப்பட்டு இருக்கிறார்களா? வரலாற்றைப் படிக்கும்போது என் ரத்தம் கொதிக்கிறது. எப்படி தேசத்தின் மகாத்மா எனும் அளவுக்கு உயர்ந்தார்கள்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அனந்தகுமாரின் பேச்சுக்கு அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும், பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது.
இந்நிலையில், மக்களவை இன்று தொடங்கியதும் முதலில் ஓமன் மன்னர் குவாபூஸ் பின் சயத் அல் சயத் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த இரங்கல் முடிந்தவுடன் காங்கிரஸ், திமுக, என்சிபி கட்சியின் எம்.பிக்கள் எழுந்து பேசினர். பாஜக எம்.பி அனந்தகுமார் ஹெக்டே மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து விவாதிக்கக் கோரினார்கள். ஆனால், அதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார்.
ஆனால், சபாநாயகர் வார்த்தையைக் கேட்காத காங்கிரஸ், திமுக, என்சிபி எம்.பி.க்கள் கையில் பதாகைகளை ஏந்தி பாஜக கட்சி கோட்சே கட்சி, மகாத்மா காந்தியை அவமதிக்காதே என்ற கோஷமிட்டனர். இதனால், மக்களவையில் கூச்சலும், குழப்பமும் நீடித்தது.
இதுமட்டுமல்லாமல் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டு சபாநாயகர் பேச முடியாத சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து அவையை நண்பகல் வரை ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்