ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து பலியாகும் சம்பவம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

நாடுமுழுவதும் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து பலியாவதை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்தியஅரசு, மாநிலங்கள் பதில் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது

கடந்த 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரரான வழக்கறிஞர் ஜி.எஸ். மணி தெரிவித்துள்ளார்.

மனுதாரர் வழக்கறிஞர் ஜி.எஸ். மணி தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
நாடுமுழுவதும் கேட்பாரற்று கிடக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவது குறித்தும், குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுவதைத் தடுக்கும் வகையிலும், கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகளை வகுத்தது.

ஆனால், அந்த வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசும், மாநில அரசுகளின் நிர்வாகத்தில் இருப்பவர்களும் முறையாகப் பின்பற்றாததால் அப்பாவிக் குழந்தைகள்தான் பலியாகிறார்கள். கடந்த 2006-ம் ஆண்டு முதன்முதலாக ஒரு குழந்தை ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது, அதன்பின் தொடர்ந்து சம்பவங்கள் நடந்தன. கடைசியாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திதல் 3 வயது சுஜித் வில்ஸன் எனும் குழந்தை விழுந்து மரணமடைந்தார்.

2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்தும் அதை நாடுமுழுவதும் உள்ள மத்திய, மாநில அரசுகளின் அதிகாரிகள் முழுமையாகப் பின்பற்றுவதில்லை. இந்த ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து பலியானதற்கு முழுமையாக நிர்வாகக் குறைபாடே காரணம்.

நீதிமன்றத்தின் தீர்ப்பை, வழிகாட்டி நெறிமுறைகளை அதிகாரிகள் முறையாகப் பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் அமல்படுத்தப்படவில்லை. நீதிமன்றத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய, மாநில அரசுகள், அதற்குப் பதில் அளித்தார்களேத் தவிர எந்தவிதமான தீவிரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆதலால், எதிர்காலத்தில் ஆழ்துளைக் கிணற்றுக்குள் குழந்தைகள் விழுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் முறையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் போதுமான அளவு நவீன சாதனங்களை வாங்கி வைத்து, மீட்புப்பணிக்குத் தனியாக வல்லுநர்களை நியமிக்க வேண்டும்.

தமிழகத்தில் திருச்சியில் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் வில்சன் இறப்பு குறித்தும், சிறுவனை மீட்கத் தவறிய அதிகாரிகள் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தார்

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in