Published : 02 Feb 2020 07:36 AM
Last Updated : 02 Feb 2020 07:36 AM

அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம்: தென்னிந்திய சிஐஐ கருத்து

2020-21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பு பட்ஜெட் குறித்த கலந்தாய்வு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. அந்தக் கூட்டத்தில் பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. பட்ஜெட்டின்சாதக பாதகங்கள் குறித்து கலந்துகொண்ட நிறுவனத் தலைவர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) தெற்கு மண்டல தலைவர் சஞ்சய் ஜெயரத்தினவேலு பட்ஜெட் குறித்து பேசுகையில், “இந்த பட்ஜெட்டில் பொருளாதார பிரமீடில் உள்ள அனைத்து துறைகளுக்குமே முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது மிகவும் கவனிக்கத்தக்கது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆழமான பட்ஜெட்டை வழங்கியுள்ளார். மொத்தமாக பார்க்கையில் நிதி ஒதுக்கீடும், வரிச் சலுகையும், பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களும் மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளன” என்றார்.

பின்னர் பேசிய சிஐஐ தமிழ்நாடு தலைவர் சந்திர மோகன், “பட்ஜெட்டில் விவசாயம், எம்எஸ்எம்இ துறை மற்றும் தனிநபர் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எல்லோரும் பெரிதும் எதிர்பார்த்த தனிநபர் வருமான வரி சலுகைகள் மிகவும் வரவேற்கத்தக்கது. இதனால் அரசுக்கு ரூ.40 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மக்களின் நுகர்வை அதிகரிக்கப் பயன்படலாம் என்பதால், பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்கும் என நம்பலாம்” என்றார்.

டன்ஃபோஸ் நிறுவனத்தின் தலைவர் ரவிசந்திரன் கூறியதாவது, “விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதை சரியாகப் பயன்படுத்தகிடங்குகள், பதப்படுத்துதல் போன்றவை மிகவும் அவசியம். அதற்கான திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன.

குறிப்பாக மீன் உற்பத்தி நிறுவனங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளதும், பால் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டல் தொடர்பான துறைக்கும் இலக்கு நிர்ணயித்துள்ளது ஆரோக்கியமான விஷயம். விவசாயத் துறையின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான முன்னெடுப்புகளுக்கு இவை நிச்சயம் உதவியாக இருக்கும் என நம்பலாம்” என்றார்.

கிரண்ட்ஃபோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரங்கநாத் கூறுகையில், “தண்ணீருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. தண்ணீரை மிகவும் பயனுள்ளதாகப் பயன்படுத்த வேண்டிய காலத்தில் இருக்கிறோம். விவசாயத்தில் தண்ணீர் பயன்பாடு தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. ஸ்டார்ட் அப்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகையும் வரவேற்கத்தக்கது. ” என்றார்.

டிசிஎஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் சுரேஷ் ராமன் கூறுகையில், “பட்ஜெட்டில் கல்விக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி உயர்கல்விக்கா? ஆரம்ப கல்விக்கா? என்பது தெரியவில்லை. கல்விமுறையைப் பொறுத்தவரை ஆரம்பக் கல்வியிலிருந்தே பிரச்சினைகள் உள்ளன. மத்திய அரசு எந்தக் கல்விக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பது போகப் போகத்தான் தெரியும். மேலும் தொழில்நுட்பம் தொடர்பாகவும் திட்டங்கள் வகுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் ஆஃப் திங்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் போன்றவற்றுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் தொழில்நுட்பம் சார் துறைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x