Last Updated : 25 Jan, 2020 02:18 PM

 

Published : 25 Jan 2020 02:18 PM
Last Updated : 25 Jan 2020 02:18 PM

குழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகளைத் தடுக்க 40 வகையான பரிந்துரைகள்: வெங்கய்ய நாயுடுவிடம் மாநிலங்களவைக் குழு வழங்கியது.

சமூக ஊடகங்களில் குழந்தைகள் ஆபாச காட்சிகளைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்ட மாநிலங்களவைக் குழு, 40 வகையான பரிந்துரைகளை மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் நேற்று வழங்கியது.

குறிப்பாக அனைத்து வகையான செயலிகளையும்(ஆப்ஸ்) கண்காணிப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான பரிந்துரைகள் செய்யப்பட்டன.

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த மாநிலங்களவைக் குழு தங்களின் பரிந்துரைகளையும், அறிக்கைகளையும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வழங்கியது.

சமூகத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது பெரும் கவலையளிக்கும் விஷயமாக மாறியுள்ள நிலையில், அதைத் தடுக்கவும், ஆய்வு செய்யவும் வெங்கய்ய நாயுடு இந்த குழுவை அமைக்க உத்தரவிட்டார்

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் அளித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச்சட்டம் 2012, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 222 ஆகியவற்றில் முக்கியமான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும்.
  • சமூக ஊடகங்களில் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் குழந்தைகள் ஆபாச காட்சிகளைத் தொழில்நுட்ப ரீதியாக, நிறுவனங்கள் ரீதியாக, சமூகம் மற்றும் கல்வி ரீதியாகவும் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள். அதனால் சமூகத்திலும், குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்றவற்றை அடையாளம் காணுதல்.
  • பிரதமர் மோடி தனது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் குழந்தைகள் பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யவும், அதைத் தடுக்க சமூகத்தில் எடுக்கப்பட வேண்டிய முயற்சிகள் குறித்தும் பேச வேண்டும்.
  • சமூக ஊடங்களில் குழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகளை தடுக்கும் வகையில் உலக நாடுகளுக்கு இடையே கூட்டமைப்பை ஏற்படுத்துதல்.
  • குழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகள் இணையதளத்தில் வருவதற்கு இன்டர் சேவை வழங்குவோர்களையும் பொறுப்பாக்க வேண்டும். மேலும், குழந்தைகள் ஆபாச காட்சிகளைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாகத் தடைகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு ஆபாச காட்சிகள் ஏதும் இருந்தால் அதை நீக்குதல், அவ்வாறு காட்சிகள் ஏதும் இருக்கிறதா எனக் கண்காணித்தல், கண்டுபிடித்தல் பணிகளைச் செய்ய வேண்டும்.
  • குழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகளைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் மாநில அரசுகளும், மத்திய அரசும் தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும், சட்ட நடவடிக்கைகளையும் எடுத்தல் அவசியம்
  • குழந்தைகள் பாலியல் குற்றத் தடுப்புச் சட்டமான போக்ஸோ 2012 சட்டம், தகவல்தொழில்நுட்பச் சட்டம்200 ஆகியவற்றில் ஐபிசி ஏற்றார்போல் சில முக்கியமான திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும்.
  • போக்ஸோ 2012-ம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்படும் திருத்தத்தில் 18 வயதுக்குக் குறைவானவர்கள் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலோ அதாது எழுத்துப்பூர்வமாக, அல்லது காட்சிகள் அடிப்படையிலோ அல்லது ஒலிநாடாக்கள் மூலம் பேசுவதன் மூலமோ ஈடுபட்டால் அதுவும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும்.
  • போக்ஸோ சட்டத்தில் மற்றொரு இணைப்பு பகுதியாகச் சேர்ப்பதில், இணையதளத்தில் பார்ப்போருக்கு வயது தொடர்பான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். குறிப்பாகக் குழந்தைகள் ஆபாச காட்சிகளைப் பார்ப்பதையும், பதிவிறக்கம் செய்வதையும் தடுக்க வேண்டும்.
  • பள்ளியின் வளாகத்துக்குள் குழந்தைகள் இருக்கும் போதும், பள்ளியின் வாகனங்களில் குழந்தைகள் வரும்போதும், குழந்தைகள் பாதுகாப்புக்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும்.
  • குழந்தைகளுக்கு எதிரான ஆபாச காட்சிகளைக் கொண்டிருக்கும் அனைத்து விதமான இணையதளங்களை முடக்கவும், தடை செய்யவும் மத்திய அரசுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x