Last Updated : 10 Aug, 2015 08:05 PM

 

Published : 10 Aug 2015 08:05 PM
Last Updated : 10 Aug 2015 08:05 PM

நிலம் கையக மசோதா நடப்பு கூட்டத்தொடரில் தாக்கல் இல்லை

நிலம் கையகப்படுத்தம் மசோதாவை ஆராய்ந்து வரும் நாடாளுமன்ற கூட்டுக்குழு தனது அறிக்கையை சமர்பிக்க குளிர்கால கூட்டத்தொடரின் முதல் வாரம் வரை அவகாசம் கோர உள்ளது. இதனால் நடப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் வாய்ப்பு இல்லை.

பாஜக எம்.பி. எஸ்.எஸ். அலுவாலியா தலைமையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 30 உறுப்பினர்கள் கொண்ட குழு, சர்ச்சைக்குரிய நிலம் கையக மசோதாவை ஆராய்ந்து வருகிறது. இக்குழு தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யவிருந்தது. இதையொட்டி அறிக்கை இறுதி செய்யப்படும் முன் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூடியது. இதில் 5 ஆண்டுகள் வரை பயன்படுத்தாத நிலத்தை நில உரிமையாளருக்கு திரும்பவும் வழங்குவது உட்பட மசோதாவின் 3 முக்கிய பிரிவுகள் மீது ஒருமித்த கருத்து எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மசோதாவின் சில பிரிவுகளை ஆராய கூடுதல் அவகாசம் தேவை என்று காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அறிக்கை சமர்ப்பிப்பதை தள்ளிவைக்கவும் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் வாரம் வரை அவகாசம் கோரவும் எஸ்.எஸ். அலுவாலியா முடிவு செய்தார்.

அறிக்கை சமர்பிக்க இன்று (ஆக. 13) வரை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்கெனவே காலநீட்டிப்பு வழங்கியுள்ள நிலையில், அவரிடம் மேலும் ஒருமுறை காலநீட்டிப்பு கோர அலுவாலியா முடிவு செய்தார். நில மசோதாவில் ஒருமித்த கருத்தை எட்ட அலுவாலியா விரும்புவதால் அவர் இம்முடிவுக்கு வந்தார்.

வரும் செப்டம்பர் – அக்டோபரில் பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நிதிஷ்குமார் அணியை வீழ்த்த பாஜக அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. நில மசோதா மூலம் பாஜகவை விவசாயிகளுக்கு எதிரான கட்சி என்று பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் பிஹார் தேர்தலுக்குப் பிறகே நில மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

நில மசோதா மீதான நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தில், நிலம் கையக சட்டத்தின் (2013) பிரிவு 24(2) மட்டும் விவாதிக்கப்பட்டது. கடந்த காலத்துக்கும் செல்லுபடியாகும் இப்பிரிவில் மேற்கொள்ளப்படும் திருத்தத்துக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x