Published : 31 Dec 2019 09:31 AM
Last Updated : 31 Dec 2019 09:31 AM

சிஏஏ-வுக்கு எதிரான போராட்டங்கள்: சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தியவர்களிடமே ரூ.80 கோடி வசூலிக்க ரயில்வே திட்டம்

பெரும் போராட்டங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் ரயில்வே துறை சொத்துக்கள் ரூ.80 கோடி அளவுக்கு சேதமடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சொத்துக்களை சேதம் செய்த வன்முறையாளர்களிடமிருந்தே இந்தத் தொகையினை வசூல் செய்யவிருப்பதாக மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே போர்டு சேர்மன் வி.கே.யாதவ் இது குறித்துக் கூறும்போது, “நாடு முழுதும் போராட்டங்களினால் ரயில்வே சொத்துக்கள் ரூ.80 கோடி அளவுக்கு சேதமடைந்துள்ளன. இதில் கிழக்கு ரயில்வேயிற்கு மட்டும் ரூ.70 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு ரயில்வேவுக்கு ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கணிப்புகள் ஆரம்பக்கட்ட மதிபீடு மட்டுமே உண்மையான சேதத் தொகை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. வன்முறையில் ஈடுபட்டு ரயில்வேவுக்கு சேதம் விளைவித்தவர்களிடமிருந்தே இந்தத் தொகையைத் திரும்பப் பெறுமாறு திட்டம் வைத்துள்ளோம்” என்றார்.

சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்போர் மீது ‘பழிக்குப் பழி’ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்ததையடுத்து தற்போது ரயில்வேயும் இதனை அறிவித்துள்ளது.

உ.பி புலந்த்ஷெஹர் முஸ்லிம்கள் சேதத்திற்காக ரூ.6 லட்சம் யோகி அரசிடம் அளித்துள்ளனர். இந்நிலையில் உ.பி.யில் போலீஸார் வீடுகளில் புகுந்து அடித்து உதைப்பதும் லட்டிகளினால் வாகனங்களைச் சேதப்படுத்துவதுமான வீடியோக்கள் உ.பி.யில் வலம்வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் வன்முறையில் ஈடுபட்டவர்களிடமிருந்தே அந்தத் தொகையை வசூலிப்பது என்ற புதிய ட்ரெண்டுக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x