Published : 12 Nov 2019 07:31 AM
Last Updated : 12 Nov 2019 07:31 AM

அயோத்தி வழக்கில் எதிர் மனுதாரர்களாக இருந்தும் நட்பை தொடர்ந்த அன்சாரி - பரமஹன்ஸ்

ராமச்சந்திர தாஸ் பரமஹன்ஸ், ஹாசிம் அன்சாரி.

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

சுமார் 70 வருடங்களுக்கு முன் நீதி மன்றங்களில் துவங்கிய அயோத்தி வழக்கில் எதிரெதிர் மனுதாரர்களாக இருந்தும் ஹாசிம் அன்சாரியும், ராமச்சந்திர தாஸ் பரமஹன்ஸும் தங்கள் நட்பை தொடர்ந்தனர். அந்நகரவாசிகளான இருவரும் இறுதித் தீர்ப்பை அறிய முடியாமல் மறைந்ததும் மறக்க முடியாத வரலாறாகப் பதிவாகி உள்ளது.

பாபர் மசூதியின் கடைசி முத்த வல்லியாக இருந்தவர் ஹாசிம் அன்சாரி. இவரது பால்ய நண்பராகவும் ராமபக்தராகவும் ஸ்ரீராமச்சந் திர பரமஹன்ஸ் இருந்தார். இருவரும் சிறு வயது முதல் அயோத்தி நகர தெருக்களில் ஓடி, ஆடி விளையாடியவர்கள்.

அதேசமயம் டிசம்பர் 23, 1949-ல் நள்ளிரவில் பாபர் மசூதியினுள் ராமர் சிலை வைக்கப்பட்ட பின் பைஸாபாத் சிவில் நீதிமன்றத்தில் இந்த இருவர் தான் முதலாவதாக வழக்கு தொடுத்தனர். இதற்காக இருவரும் அயோத்தியில் இருந்து பைஸாபாத் நீதிமன்றத்துக்கு அப்போது ஒன் றாகவே கிளம்பிச் சென்றுள்ளனர். நீதிமன்ற வளாகத்தில் வழக்கிற்காக மனு அளித்த பின்பும் ஒன்றாகவே இருவரும் வீடு திரும்பியுள்ளனர்.

நீதிமன்றத்தில் வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், பரமஹன்ஸுடன் அவரது திகம்பர அஹாடா மடத்தில் அன்சாரி அவ்வப்போது தேநீர் அருந்தி மகிழ்ந்துள்ளார். பைஸாபாத்தில் இருந்து அயோத்திவழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வுக்கு மாறிஇருந்தது. அப்போதும் இருவரும்இணைந்து சென்று வழக்கில்ஆஜராகி வருவது தொடர்ந்துள்ளது. மத நம்பிக்கைகளைத் தாண்டிய அன்சாரி மற்றும் பரமஹன்ஸுக்கு இடையிலான நட்பை அயோத்திவாசிகள் இன்றும் நினைவுகூர்ந்து நெகிழ்கின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஹாசிம் அன்சாரியின் மகனான இக்பால் அன்சாரி கூறும்போது, ‘‘பாபர் மசூதி இடிப்பிற்கு பின் இருவரும் வெளிப்படையாக சந்திப்பதை தவிர்த்தனர். இதன் பின்னணியில் வழக்கினால் அவர்கள் நட்பு விமர்சனத்திற்கு உள்ளாகி விடக் கூடாது என அஞ்சினர். 2003-ல் பரமஹன்ஸ் மறைந்த போது எனது தந்தை அவரது உடலின் முன் மறுநாள் காரியம் நடைபெறும் வரை இரவிலும் கண்விழித்து அமர்ந்திருந்தார்’’ எனத் தெரிவித்தார்.

வழக்கில் ஆஜராக அலகாபாத் உயர் நீதிமன்றம் சென்றுவரும் செலவை அன்சாரியால் சமாளிக்க முடியாமல் இருந்துள்ளது. இதற்காக வீட்டில் இருந்து கிளம்பிசெல்லும் அன்சாரி லக்னோ செல்லும் பைபாஸ் சாலையில் வந்து காத்திருப்பாராம். பிறகு காரில் வரும் பரமஹன்ஸ் தன்னுடன்அன்சாரியை அழைத்துச் சென்றுவிடுவார் எனவும், பிறகு மீண்டும்அதே இடத்தில் விட்டு விடுவதுவழக்கம் என்றும் அயோத்திவாசிகள் நினைவுகூர்கின்றனர்.

ஹாசிம் அன்சாரி மரணம்

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் அயோத்திவாசியான மவுலானா முகம்மது பாத்ஷா கூறும்போது, ‘‘தனது இறுதிக்காலத்தில் உடல்நலம் குன்றிய அன்சாரி தன் மரணத்திற்கு முன்பாக வழக்கின் இறுதித் தீர்ப்பை அறிய விரும்பினார். அதில் முஸ்லிம்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தாலும் வேறு இடத்தில் ராமர் கோயில் கட்டிய பின்பே பாபர் மசூதியை அதே இடத்தில் கட்ட வேண்டும் எனக் கூறிவந்தார். இதற்கு இடையில் நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் அனைத்திலும் முதல் நபராக பங்கெடுத்தார்’’ எனத் தெரிவித்தார்.

பாபர் மசூதி டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்டபோது அயோத்தியில் மதக்கலவரம் ஏற்பட்டது. இதில்அன்சாரியின் வீட்டு முன்புறம் தீவைக்கப்பட்டபோது அந்நகரஇந்துக்கள் அவரது குடும்பத்தினரை காப்பாற்றி உள்ளனர். பிறகு தீவைப்பிற்கு அரசு இழப்பீடாகக் கிடைத்த தொகையில் அன்சாரியின் மகன் அம்பாஸிடர் கார் வாங்கி வாடகைக் காராக ஒட்டி வந்துள்ளார். இந்த நன்றிக்காக அயோத்திநகரவாசிகளுக்கு மட்டும் கோயில்களுக்கு செல்ல இலவசமாக ஓட்டியுள்ளார்.

காங்கிரஸை குறைகூறிய அன்சாரி

அயோத்தி காவல் நிலையத்தின் முக்கிய நபர்கள் பட்டியலில் இடம் பெற்றதால் அன்சாரி, மிசா சட்டத்தில் கைதாகி இருந்தார். இதில் உ.பி.யின் பரேலி சிறையில் அவர் சுமார் எட்டு மாதங்கள் அடைக்கப்பட்டிருந்ததும் அவரதுமகன் இக்பால் மனதில் பசுமையாகவே பந்திந்துள்ளது.

இது குறித்து இக்பால் அன்சாரி கூறும்போது, ‘‘மசூதியினுள் சிலைவைக்கப்பட்டது, பிறகு அது பூட்டப்பட்டது, அந்த பூட்டு திறக்கப்பட்டது, வளாகத்தில் பூஜைக்கு அனுமதித்தது மற்றும் மசூதி இடிக்கப்பட்டது என அனைத்தும் நடைபெற்றது காங்கிரஸ் ஆட்சியில்தான். எனவே, பாபர் மசூதி பிரச்சினைக்கு பாஜகவை விட என் தந்தை காங்கிரஸையே அதிகமாக குறை கூறி வந்தார்’’ எனத் தெரி வித்தார்.

அயோத்தியின் அனுமன்காடி மடத்தின் அதிபாரான மஹந்த் கியாந்த் தாஸும் அன்சாரியின் நண் பராக இருந்தவர். இவரும் பண்டிகைக் காலங்களில் அன்சாரியின் வீட்டுக்கு வந்து வாழ்த்து சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன. தனது 96-வது வயதில் 2006-ல் ஹாசிம் அன்சாரி இறந்த பின் அவரது மகனான இக்பால் வழக்கின் முக்கிய மனுதாரராகி வழக்கை தொடர்ந்து வந்தார். அயோத்தி வழக்கின் தீர்ப்பை இந்துக்களும் பெரும்பாலான முஸ்லிம்களும் சுமூகமாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அந்த தீர்ப்பை கேட்க நண்பர்களான பரமஹன்ஸ், அன்சாரி இருவரும் இல்லாதது அயோத்தி மக்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x