Published : 09 Nov 2019 03:53 PM
Last Updated : 09 Nov 2019 03:53 PM

அயோத்தி தீர்ப்புக்கு முஸ்லிம் தலைவர்கள் வரவேற்பு

லக்னோ

அயோத்தி வழக்கு தொடர்பாக இன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாட்டின் முக்கியமான முஸ்லிம் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம், முஸ்லிம்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தை மத்திய அரசு கட்டுப்பாட்டில் வைத்து, கோயில் கட்டுவதற்குத் தனியாக அறக்கட்டளை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக பெரும்பான்மையான தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இத் தீர்ப்பினை நாட்டின் முக்கியமான முஸ்லிம் தலைவர்கள் பலரும் வரவேற்றுள்ளனர்.

இக்பால் அன்சாரி:

அயோத்தி நிலப் பிரச்சினை தொடர்பாக வழக்குத் தொடர்ந்தவர்களில் ஒருவரான இக்பால் அன்சாரி கூறுகையில், ''நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கிறோம். அதை ஏற்றுக்கொள்கிறோம். மசூதிக்கான நிலம் எங்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை இப்போது நாம் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நாட்டின் நீண்டகால நிலுவையில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது'' என்றார்.

ஐஷ்பாக் இட்காவின் இமாம்:

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினரும், ஐஷ்பாக் இட்காவின் இமாமுமான மவுலானா காலித் ரஷீத் ஃபிரங்கி மஹாலி கூறுகையில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் பின்பற்றுவோம் என்று நாங்கள் எப்போதும் கூறிவந்துள்ளோம். அனைவருக்கும் எங்கள் வேண்டுகோள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். எங்கள் சட்டக் குழு தீர்ப்பின் முடிவைப் படித்து இறுதி அறிக்கையை வழங்கும்'' என்றார்.

மவுலானா யாசூப் அப்பாஸ்:

அகில இந்திய ஷியா தனிநபர் சட்ட வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் மவுலானா யாசூப் அப்பாஸ் கூறுகையில், ''நாங்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதன்படி நடப்போம். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் கருத்துக்காக நாங்கள் காத்திருப்போம். பின்னர் தீர்ப்பை சட்டபூர்வமாக விரிவாகப் படிப்போம்'' என்றார்.

சைஃப் அப்பாஸ்:

அகில இந்திய ஷியா மார்க்கசி சந்த் குழுவின் தலைவர் சைஃப் அப்பாஸ் கூறுகையில், ''உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படியே நடப்போம் என்று நாங்கள் எப்போதும் கூறியுள்ளோம். எனவே நாங்கள் அந்த முடிவை மதிக்கிறோம், ஏற்றுக்கொள்கிறோம். சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் பேணுமாறு நாங்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்'' என்று தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x