Published : 08 Nov 2019 09:35 am

Updated : 09 Nov 2019 08:36 am

 

Published : 08 Nov 2019 09:35 AM
Last Updated : 09 Nov 2019 08:36 AM

அயோத்தி தீர்ப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை: உ.பி.யில் பலூன் கேமரா மூலம் கண்காணிப்பு

the-judgment-of-ayodhya

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

அயோத்தி வழக்கின் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் பலூன் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், வான்வெளி கண்காணிப்புகளுக்கு சமீபகாலமாக டிரோன் எனும் தானியங்கி சிறு விமானங்களை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. ஆனால், இந்த விமானங்களை அதிக உயரம் பறக்க விட முடியாது. எனவே, பெரிய பரப்பளவிலான பகுதிகளை ஒரே சமயத்தில் கண்காணிப்பது சிரமம்.

ஆதலால், இதுபோன்ற சூழ்நிலைக்கு ஏற்றவாறு, வேறுவிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்த கான்பூர் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் அனந்த் தேவ் திட்டமிட்டார். இதற்காக அவர் கான்பூர் ஐஐடி-யின் உதவியை நாடினார்.

இதில், ‘ஏரோ ஸ்பேஸ்' துறையின் ஆய்வு மாணவர் சர்வேஷ் சோன்கர் என்பவரின் கண்டுபிடிப்பான ‘ஏரோ ஸ்டேக்’ எனும் தொழில்நுட்பமுறை பலூன் அவருக்கு உதவியுள்ளது. கான்பூரில் பறக்கவிடப்பட உள்ள இந்த பலூன், தரையில் இருந்து இரண்டு கி.மீ. உயரத்தில் பறந்தபடி இருக்கும். அப்போது, அதற்கு கீழே இணைக்கப்பட்டிருக்கும் கேமரா, சுமார் எட்டு கி.மீ. சுற்றளவு பகுதியை படம்பிடிக்கும்.

இதன் மூலம், கான்பூர் காவல்துறை தலைமையகக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து அந்நகரம் கண்காணிக்கப்படும். மேலும், ஏதாவது சந்தேகப்படும் வகையில் தென்பட்டால் அந்த கேமரா உடனடியாக கட்டுப்பாட்டு அறையை எச்சரிக்கும். எனவே, அசம்பாவித சம்பவங்களை உடனடியாக தடுக்க முடியும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.இந்த தொழில்நுட்பம் வட இந்தியாவில் முதன்முறையாக பயன்படுத்தப்படவுள்ளது.

இதற்கு முன்பு, அலகாபாத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மஹா கும்பமேளாவின் கண்காணிப்பிற்கு சோதனை முறையில் பலூன் பயன்படுத்தப்பட்டது, எனினும், அது தற்போது கான்பூரில் பயன்படுத்தப்பட இருக்கும் அளவிற்கான உயரிய தொழில்நுட்பம் கொண்டது அல்ல.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கான்பூர் ஐஐடியின் ஆய்வு மாணவரான சர்வேஷ் குமார் சோன்கர் கூறியதாவது:டிரோன்களை அதிக சக்திவாய்ந்த பேட்டரிகளுடன் பறக்கவிட்டாலும், ஓரிரு மணி நேரத்திற்கு பின் இறங்கி விடும். ஆனால், பலூனின் ஏற்றப்படும் ஹீலியம் வாயுவால் ஒரு நாளுக்கும் அதிகமாக தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதற்கான செலவு சுமார் ரூ.40 லட்சம் வரை இருக்கும் என அவர் கூறினார்.

இதேபோல், பலூன் மூலமாக கண்காணிப்பு சென்னையின் கிழக்குப்பகுதி காவல்துறையாலும் பயன்படுத்தப்பட்டது. எனினும், அதில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக அந்த வகை கண்காணிப்பை தமிழக போலீஸார் தொடரவில்லை எனக் கூறப்படுகிறது.

கான்பூரில் இந்த பலூன் கண்காணிப்பு வெற்றிகரமாக இருந்தால், அதனை நாடு முழுவதும் அமலாக்கும் வாய்ப்புகள் உள்ளன. கான்பூர் நகரம் மதக்கலவரங்கள் அடிக்கடி நிகழும் பகுதியாகும். எனவே, இங்கு ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அயோத்தி தீர்ப்புமுன்னெச்சரிக்கை நடவடிக்கைஉ பிபலூன் கேமராதமிழக போலீஸார்அயோத்தி வழக்கு#AYODHYAVERDICT

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author