Last Updated : 19 Aug, 2015 04:58 PM

 

Published : 19 Aug 2015 04:58 PM
Last Updated : 19 Aug 2015 04:58 PM

எண்கள் சொல்லும் சேதி: காவல்துறையில் பாகுபாட்டை எதிர்கொள்ளும் பெண் போலீஸார்

இந்திய அளவில் காவல்துறையில் பெண்களின் பங்கு வெறும் 6.1 சதவீதம் மட்டுமே என்கிறது ஓர் ஆய்வறிக்கை.

இந்தியக் காவல் துறையின் விகிதாச்சாரம், ஆண்களுக்கும் பெண்களுக்குமான அதிகப்படியான வித்தியாசத்தில், நிலைசாய்ந்து கொண்டிருக்கிறது. தங்களை பலவீனமாகவும், குறைவான அளவே உழைக்கக் கூடியவர்களாகவும், உறுதி குறைந்தவர்களாகவும் நினைக்கும் பெண்கள் விகிதம் காவல் துறையில் அதிகமாக இருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. அதிகப்படியான பெண்கள், காவல்துறைக்குத் தேவைப்படும் அதே நேரத்தில், சமத்துவம் விடுத்து எண்ணிக்கை மட்டுமே பார்க்கக்கூடாது எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உள்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, தேசிய காவல்துறை பயிற்சியகத்தின் இயக்குனர் அருணா.எம்.பகுகுணா ஆகியோர், காமன்வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சியின் (சி.ஹச்.ஆர்.ஐ.) தெற்காசிய மகளிர் காவல்துறை பற்றிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை, மாலத்தீவுகள், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்திய மகளிர் காவல்துறையின் நிலையை ஆராய்ந்திருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில், காவல்துறையில் பெண்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கி இருந்தாலும், மொத்தப் படையில், பெண்களின் எண்ணிக்கை 6 சதவீதமாகவே இருக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலேயே மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தமிழக காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு 12 சதவீதமாக இருக்க, அஸாமில் 1 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. ஏற்கெனவே பல மாநிலங்களும் காவல்துறையில் பெண்கள், 30 சதவீதம் அல்லது அதற்கும் மேலாக இருக்கவேண்டும் என்ற விதியை அமல்படுத்தியும் இந்த நிலைமை.

இது குறித்து கருத்து தெரிவித்த, மகளிர் காவல்துறையின் தேசியக் கருத்தரங்கு செயலாளர் கன்வல்ஜித் தியோல், "ஒவ்வொரு வருடமும் ஓய்வு பெறுபவர்களால் ஏற்படும் காலியிடங்களை முழுமையாக நிரப்பினால், இப்பிரச்சனை சரியாகும். டிசம்பர் 2012 கூட்டு பலாத்காரத்துக்குப் பிறகு, ஒவ்வொரு மெட்ரோ நகரங்களிலும் 10,000 பெண்கள் காவல்துறைக்குத் தேந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறினேன். அப்படிச் செய்திருக்கும் பட்சத்தில் பெண்கள் விகிதாச்சாரம் அதிகரித்திருப்பதோடு, பாதுகாப்பும் அதிகரித்திருக்கக்கூடும்" என்றார்.

தேசிய காவல்துறை பயிற்சியகத்தின் முன்னாள் இயக்குநரான கமல் குமார் இது பற்றிக் கூறியது:

"ஒவ்வொரு காவலரும் 8 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க வேண்டுமானால், இந்தியா இன்னும் 3.3 லட்சம் பேரை காவல்துறைப் பணியில் நியமிக்க வேண்டும். அவர்கள் அத்தனை பேருமே பெண்களாக இருக்கும் பட்சத்தில், காவல்துறையில் பெண்களின் சதவிகிதம் கொஞ்சம் கூடி 19 சதவீதத்தைத் தொடும்" என்றார்.

"சில மாநிலங்களின் பெண் காவல்துறை அதிகாரிகள், ஆழமான நேர்முகத் தேர்வுகளுக்குப் பின்னரே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். கழிப்பறைகள் பற்றாக்குறை, குழந்தை வளர்ப்பு மற்றும் பல வளர்ச்சித்திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு, உறுதியான பெண்களே நியமிக்கப்படுகின்றனர்" என்கிறார் ஆய்வின் துணை ஆசிரியர் தேவிகா பிரசாத். "பெரும்பாலான மாநிலங்களில், ஆண் மற்றும் பெண் காவலர்கள் வேலைத் தேர்வுகளுக்குப் பொதுவான முறைகள் எதுவுமில்லை; இது பணி உயர்வைச் சிதைக்கிறது" எனவும் கூறுகிறார் தீபிகா.

"மகளிர் காவல்துறை அதிகாரிகள் பெண்கள் தொடர்பான குற்றங்கள் மற்றும் பெண் கைதிகள் தொடர்பான வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெண் காவலர்களின் எண்ணிக்கை அதிகமாவதைக் காட்டிலும், அவர்களை வரவேற்கும் போக்கு அதிகமாக வேண்டும்" என்கிறார் சி.ஹச்.ஆர்.ஐ. இயக்குநர் மாகா தருவாலா.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்த கேரள மாநில முன்னாள் காவல்துறை உயரதிகாரி ஜேக்கப் புன்னூஸ்,"1973-ல் கேரளாவில் முழு மகளில் காவல் நிலையத்தைத் தொடங்கினோம். ஆனால் அந்த முயற்சி ஏற்புடையதாக இருந்திருக்கவில்லை. 2003-ல் அத்திட்டத்தைக் கைவிட்டு, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு பெண் இருக்க வேண்டும் என்ற திட்டத்தைத் தொடங்கினோம். இம்முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது" என்றார்.

தமிழில்: க.சே.ரமணி பிரபா தேவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x