Published : 04 Nov 2019 11:28 AM
Last Updated : 04 Nov 2019 11:28 AM

தாஜ்மஹாலில் மாசு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.6.84 கோடி அபராதம்

தாஜ் மஹால்

ஆக்ரா

தொடர்ச்சியான கட்டுமான நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கிய வகையில் தாஜ்மஹாலை மாசுபடுத்தியதற்காக உத்தரப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ.6.84 கோடி அபராதம் விதித்துள்ளது.

காற்று மாசுபாடு மிகப்பெரிய கவலையாக இருப்பதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உத்தரப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய அதிகாரி புவன் யாதவ் கூறியதாவது:

''தொடர்ச்சியான கட்டுமான நடவடிக்கைகளுடன் ஆக்ரா மாவட்டத்தில் காற்றை மாசுபடுத்தியதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்.எச்.ஏ.ஐ) ரூ .6.84 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆக்ரா நகர் நிகாமுக்கு காற்று மாசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில் இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆக்ராவில் உள்ள செங்கல் சூளைகளில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பழைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஜிக் - ஜாக் தொழில்நுட்பத்திற்கு மாறும்படி வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

ஜிக்ஜாக் சூளைகளில், அடுக்கப்படும் செங்கற்கள் இடையே சூடான காற்று ஒரு ஜிக்ஜாக் பாதையில் பயணிக்கும். ஜிக்ஜாக் வடிவமைப்பு வெப்பத்தின் சீரான விநியோகத்தையும் உறுதி செய்கிறது, 'வகுப்பு 1' செங்கற்களின் பங்கை சுமார் 90 சதவீதமாக அதிகரிக்கிறது. இது வெப்ப உமிழ்வை கணிசமாகக் குறைக்கிறது.

கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் தூசி ஒடுக்கும் மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆக்ரா மேம்பாட்டு ஆணையம், அவாஸ் விகாஸ் மற்றும் அரசு பொதுப்பணித்துறை போன்ற பல்வேறு அரசு நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

17 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தாஜ்மஹாலும் ஆக்ரா நகரமும் மாசுபடாமல் இருக்க வேண்டுமெனில் சுற்றுவட்டாரங்களில், மாவட்டம் முழுவதும் கட்டப்படும் கட்டுமானப் பணிகளின்போது, தண்ணீர் தெளித்தல், பச்சை உறை நிறுவுதல், மூலப்பொருட்களை மூடுவது போன்ற அனைத்து இடிப்பு மற்றும் கட்டுமான கழிவு விதிகளையும் பின்பற்ற வேண்டும்''.

இவ்வாறு உத்தரப் பிரதேச மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பிராந்திய அதிகாரி புவன் யாதவ் தெரிவித்தார்.

முக்கியமாக காற்று மாசுபாடு காரணமாக தாஜ்மஹால் சில ஆண்டுகளாக மஞ்சள் நிறத்துடன் மாறி வருகிறது. இது தாஜ்மஹாலின் அழகைக் கெடுக்கிறது. பளிங்கில் மஞ்சள் கலந்து நிற மாற்றம் ஏற்பட ஆக்சிஜனேற்றம் ஒரு முக்கியக் காரணமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x