Published : 17 Sep 2019 02:03 PM
Last Updated : 17 Sep 2019 02:03 PM

நம்பிக்கை துரோகம், நம்பிக்கையற்றவர்கள் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்: காங்கிரஸ் மீது மாயாவதி ஆவேசம்

ஜெய்ப்பூர்

நம்பிக்கை துரோகம், நம்பகத்தன்மையற்றவர்கள் என்பதை காங்கிரஸ் கட்சி நிரூபித்துவிட்டது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி காங்கிரஸ் கட்சியையும், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டையும் கடுமையாகச் சாடியுள்ளார்.

200 உறுப்பினர்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 100 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். காங்கிரஸ்கட்சிக்கு வெளியில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியும், ராஷ்ட்ரிய லோக்தளம் கட்சியும் ஆதரவு அளித்து வந்தது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சார்பில் அசோக் கெலாட் முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களும் இன்று ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

ஒட்டுமொத்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்களும் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டதால், அவர்கள் மீது கட்சித் தாவல் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் ராஜேந்திர சிங் குடா, ஜோகிந்திர் சிங் அவானா, வஜிப் அலி, லகான் சிங் மீனா, சந்தீப் யாதவ், தீப்சந்த் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததால், 200 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் அந்த கட்சியின் பலம் 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேரும் தங்களின் கடிதத்தை பேரவைத் தலைவர் சி.பி. ஜோஷியிடம் நேற்று நள்ளிரவு சென்று வழங்கினார்கள்.

இப்போது 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளதால், வரும் நவம்பர் மாதம் நடக்கும் நகராட்சித் தேர்தல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்கும் பஞ்சாயத்து தேர்தலில் காங்கிரஸ் நம்பிக்கையுடன் போட்டியிடும்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் செயலையும், காங்கிரஸ் கட்சியையும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கடுமையாகச் சாடியுள்ளார். ட்விட்டரில் மாயாவதி கூறுகையில், " காங்கிரஸ் கட்சி எப்போதும் டாக்டர் அம்பேத்கருக்கும், அவரின் கொள்கைகளுக்கு விரோதமானது. அதனால்தான் அம்பேத்கர் நாட்டின் முதல் சட்டஅமைச்சராக இருந்து அதை ராஜினாமா செய்தார். பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேரை காங்கிரஸ் கட்சி சேர்த்துக்கொண்டது நம்பிக்கை துரோகம். காங்கிரஸ் கட்சி நம்பகத்தன்மையற்றது, பொறுப்பற்றது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, உறவை முறித்துக்கொண்டுள்ளது.

எதிரிகளுக்கும், எதிராக போரிடுவதற்கு பதிலாக, எப்போதும், தோழமையுடன், ஆதரவு அளிக்கும் கட்சிகளையும்தான் காங்கிரஸ் கட்சி புண்படுத்துகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினருக்கு எதிரானது காங்கிரஸ் கட்சி. இடஒதுக்கீட்டுக்கு ஒருபோதும் நேர்மையாகவும், கடமை உணர்ச்சியுடனும் கங்கிரஸ் கட்சி ஒருபோதும் நடந்தது இல்லை " எனச் சாடியுள்ளார்


கடந்த 2009ம் ஆண்டு இதேபோன்ற அரசியல் நிலையற்ற தன்மை ராஜஸ்தானில் ஏற்பட்டது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களையும் அசோக் கெலாட் தன்பக்கம் இழுத்துக்கொண்டு ஆட்சியை ஸ்திரப்படுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x