Published : 16 Sep 2019 06:26 PM
Last Updated : 16 Sep 2019 06:26 PM

தன் பிறந்த நாளன்று சர்தார் சரோவர் அணையைப் பார்வையிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி 

செவ்வாயன்று பிரதமர் நரேந்திர மோடியின் 69வது பிறந்த தினமாகும். இந்த தினத்தில் நர்மதை நதி மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை நமாமி நர்மதே மஹோத்சவத்தை முன்னிட்டு பிரதமர் பார்வையிடுகிறார்.

நர்மதை நதி மீதான சர்தார் சரோவர் அணை தனது அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டியதையடுத்து அதனை கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு மாலை 138.68 மீட்டர்கள் அதன் நீர்மட்டம் உயர்ந்தது, இது அதிகபட்ச நீர்மட்டமாகும்.

திங்கள் இரவு பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்து இறங்குகிறார். செவ்வாய் காலை அணைக்கட்டைப் பார்வையிடுகிறார்.

அணைக்கட்டைப் பார்வையிடும் முன்பாக ரைசான் கிராமத்தில் தன் தாயாரிடம் ஆசி பெறுகிறார் மோடி என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“கேவாதியாவில் அணைக்கட்டைப் பார்வையிட்ட பிறகு கூட்டம் ஒன்றில் பிரதமர் உரையாற்றுகிறார். இதற்காக 10,000 பேரை உள்ளடக்கக்கூடிய சிறப்பு இட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரை முடிந்த பிறகு பிரதமர் மோடி அணைக்கட்டுப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணி திட்டங்களையும், ஒற்றுமைச் சிலையையும் பார்வையிடுகிறார்.”என்று நர்மதா மாவட்ட ஆட்சியர் ஐ.கே.படேல் தெரிவித்தார்.

மதியம் 12 மணியளவில் தத்தாத்ரேயர் கோயிலுக்கும் பிரதமர் வருகை தரவுள்ளார். நர்மதா அணை செப்.17, 2017-ல் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இதனால் பலருக்கு குடிநீர் வசதிகளும், விவசாய நலன்களும் பெரிய அளவில் பூர்த்தியாகியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x