செய்திப்பிரிவு

Published : 11 Sep 2019 13:54 pm

Updated : : 11 Sep 2019 14:40 pm

 

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

let-militant-shot-dead-in-sopore
பிரதிநிதித்துவப்படம்

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் நகரில் பழ வியாபாரி ஒருவர் வீட்டில் தாக்குதல் நடத்திய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் இன்று சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

" காஷ்மீரின் சோப்பூரில் சமீபத்தில் ஒரு பழ வியாபாரியை ஒருவர் தாக்கியதாக எங்களுக்குப் புகார் வந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்தபோது, அந்தப் பழ வியாபாரியைத் தாக்கியது ஒரு தீவிரவாதி என்று கண்டுபிடித்தோம். அந்தத் தீவிரவாதியின் பெயர் ஆசிப் மக்பூல் பாட். சோப்பூர் பகுதியில் பெரும் பதற்றத்தை தீவிரவாதி பாட் ஏற்படுத்தி வந்துள்ளார்.

போஸ்டர்களை ரகசியமாக அச்சடித்து ஒட்டுதல், மக்களை அச்சுறுத்தும் வகையில் வாசகங்களை வெளியிடுதல் போன்றவற்றை கடந்த ஒருமாதமாக பாட் செய்து மக்களை அச்சுறுத்தி வந்துள்ளார். கடைகள், வர்த்தக நிறுவனங்களை மக்கள் திறக்க முயன்றாலும் அதைத் திறக்கவிடாமல் தடுத்துள்ளார்.

இந்நிலையில், சோப்பூரில் ஒருவீட்டில் தீவிரவாதி பாட் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அதிகாலை அந்த வீட்டைச் சுற்றிவளைத்து மக்பூல் பாட்டை வெளியேறக் கூறினோம்.ஆனால், திடீரென போலீஸார், பாதுகாப்புப் படையினர் மீது பாட் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினார், துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.


இந்த குண்டுவீச்சிலும், துப்பாக்கிச் சூட்டிலும் இரு போலீஸார் காயமடைந்தனர், அவர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்புப் படையினர் அளித்த தகுந்த பதிலடியில் தீவிரவாதி பாட் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹமிதுல்லா ராதர் குடும்பத்தில் இருந்த 3 பேர் காயமடைந்தனர், அவரின் பேத்தி (சிறுமி) ஒருவரும் படுகாயமடைந்தார். சமீபத்தில் ஷாபி ஆலம் என்ற தொழிலாளியை சுட்டுக் கொலை செய்ததும் தீவிரவாதி பாட் என்பது தெரியவந்தது".

இவ்வாறு தில்பாக் சிங் தெரிவித்தார்.

பிடிஐ

LeT militantShot deadSoporeJammu and KashmirLashkar-e-Taiba militantFamily of a fruit traderசோப்பூர்லஷ்கர் இ தொய்பாதீவிரவாதி
Popular Articles

You May Like

More From This Category

More From this Author