Published : 09 Sep 2019 08:50 AM
Last Updated : 09 Sep 2019 08:50 AM

உத்தரபிரதேச மாநிலத்தில் வருகையை பதிவு செய்ய மூன்று முறை ‘செல்பி’ அனுப்பும் உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி

உ.பி. அரசின் தொடக்கப் பள்ளிகளின் கல்வி நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பள்ளிகளின் அடிப்
படை வசதிகள் இல்லாததும், அதன் ஆசிரியர்கள் தம் வேலைநாட்களில் முறையாகப் பணிக்கு வராததும் காரணமாக உள்ளது.

இதுதொடர்பாக உ.பி. அரசு பல அதிரடி மாற்றங்களை செய்து கல்வியின் தரத்தை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.அதில், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் காலை, நண்பகல் மற்றும் மாலை என அன்றாடம் மூன்று முறை பள்ளியிலும், மாணவர்களுடனும் செல்பி எடுத்து அரசுக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையே, ஆசிரியர்கள் வருகைக்கான பதிவேடாக கருதி அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.இதற்கு ஆசிரியர்களின் ஒரு பகுதியினர் ஆதரவளிக்க, பெரும்பாலானவர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ்; நாளேட்டிடம் உ.பி. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘எம்.பி, எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு இதேபோல் செல்பி புகைப்படங்களின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுவதில்லை. இத்திட்டத்தின் மூலம் ஆசிரியர்களை தீயவர்களை போல சித்தரிக்க அரசு முயல்கிறது’ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வந்த செல்பி முறையை பல பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது. இதற்கான நடவடிக்கையில் உ.பி.யின் பாராபங்கி மாவட்டப் பள்ளிகளின் 700 ஆசிரியர்களின் ஊதியங்கள் செல்பி வராத நாட்களுக்கு அளிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அரசு தொடக்கப்பள்ளிகளின் கண்காணிப்பாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இதற்கு முன் பல பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களுக்கு பதிலாக வேறு நபர்களை அனுப்பி வைப்பதும் வழக்கமாக இருந்துள்ளது. இதுபோன்ற ‘பினாமி’ பணிக்கு தங்கள் சொந்த செலவில் குறைந்த பணத்தை அந்த ஆசிரியர்கள் அளித்து விடுகின்றனர்.

அத்துடன், பள்ளிக்கு வராதவர்களும், அன்றாடம் வருபவர்களும் ஒரே வகையான ஊதியம் பெறுவதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x