Published : 05 Sep 2019 04:25 PM
Last Updated : 05 Sep 2019 04:25 PM

புதிய மோட்டார் வாகனச் சட்டம்: குடிபோதையில் ஆட்டோ இயக்கிய ஓட்டுநருக்கு ரூ.47,500 அபராதம் 

அபராதம் விதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து : படம் ஏஎன்ஐ

புவனேஷ்வர்,


ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியும், குடிபோதையில் ஆட்டோ ஓட்டிய ஓட்டுநருக்கு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி 47 ஆயிரத்து 500 ரூபாயை போக்குவரத்து போலீஸார் அபராதமாக விதித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் நாடுமுழுவதும் அமலுக்கு வந்துள்ளது. போக்குவரத்து விதிகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் கடுமையான அபராதங்கள் விதிக்கும் வகையில் சட்டத்தில் அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஒடிசா மாநிலம், புவனேஷ்வரைச் சேர்ந்தவர் ஹரிபந்து கஹான். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். புவனேஷ்வர் நகரில் உள்ள ஆச்சார்யா விஹார் மற்றும் ஜெயதேவ் விஹார் பகுதியில் நேற்று போக்குவரத்து போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்தப் பகுதியாக ஆட்டோ ஓட்டி வந்து ஹரிபந்து கஹான் வந்துள்ளார். அவரை மறித்த போக்குவரத்து போலீஸார் ஆட்டோக்குரிய ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால், பெரும்பலான ஆவணங்கள் இன்றி இருந்த ஹரிபந்து, குடிபோதையிலும் வாகனத்தை இயக்கியுள்ளார்.

இதனால், போக்குவரத்து போலீஸார் ஹரிபந்துவுக்கு பல்வேறு பிரிவுகளில் ரூ.47500 அபராதம் விதித்துள்ளனர். ஆனால், போக்குவரத்து போலீஸாரிடம் இந்த ஆட்டோவை வேறு ஒருவரின் ரூ25 ஆயிரத்துக்கு வாங்கித்தான் ஓட்டி குடும்பத்தை நடத்தி வருகிறேன். இதுபோன்ற பெரிய தொகையை அபாராதமாகச் செலுத்த முடியாது என போக்குவரத்து போலீஸாரிடம் ஹரிபந்து தெரிவித்துள்ளார்.

ஆனால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போக்குவரத்து போலீஸார் ரூ.47,500க்கான செலானில் குறிப்பிட்டுள்ள அபராதத்தை செலுத்தும்படி உத்தரவிட்டனர். அந்த செலானில் குறிப்பிட்டுள்ளபடி, பொதுவான குற்றத்துக்கு ரூ.500, வாகன உரிமைக்கு தொடர்பில்லாதவர் வாகனத்தை இயக்கியமைக்காக ரூ.5 ஆயிரம், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனத்தை இயக்கியதால் ரூ.5 ஆயிரம், மதுபோதையில் வாகனத்தை இயக்கியதால் ரூ.10ஆயிரம், காற்றுமாசு ஏற்படுத்தியமைக்காக ரூ.10 ஆயிரம், பதிவுச்சான்று இல்லாததால் ரூ.5 ஆயிரம், பெர்மிட் இல்லாமல் ஓட்டியதற்காக ரூ.10 ஆயிரம், காப்பீடு இன்றி வாகனம் ஓட்டியதற்காக ரூ.2 ஆயிரம் என ரூ.47, 500 அபராதமாக விதித்துள்ளனர்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் ஹரிபந்து கூறுகையில், " புவனேஷ்வரில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் அபராதத்தை செலுத்த போக்குவரத்து போலீஸார் கூறியுள்ளார்கள். எதற்காக இதுபோன்ற மிகப்பெரிய அபராத தொகையை எனக்கு விதித்தார்கள் எனத் தெரியவில்லை. நான் குடிபோதையில் இருந்தேன், இதுதவிர வேறு எந்த விதிமுறை மீறலும் செய்யவில்லை. என்னிடம் அனைத்து ஆவணங்களும் இருந்தன. அவை அனைத்தும்வீட்டில் இருந்தன. ஆட்டோவில் இருந்தால் திருடுபோய்விடுவதால், வீட்டில் வைத்திருந்தேன். குடிபோதையில் வாகனம் இயக்கியதற்கு என்ன அபராதமோ அதை செலுத்த தயாராக இருக்கிறேன். ஆனால் தன்னிச்சையாக அபராதம் விதிக்கிறார்கள்" எனக் குற்றம்சாட்டினார்.

இதுதொடர்பாக புவனேஷ்வர் போக்குவரத்து போலீ்ஸ் துணை ஆணையர் அமரேஷ் பாண்டா கூறுகையில், " போக்குவரத்து போலீஸார் சோதனையின் போது அந்த ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்துள்ளார். போக்குவரத்து சிக்னலை மீறியபோதுதான் போலீஸார் அவரை பிடித்தார்கள். போலீஸார் கேட்ட எந்த ஆவணத்தையும் அவர் அளிக்கவில்லை. அதனால், பல்வேறு விதிமுறை மீறலுக்காக ரூ.47 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x