Last Updated : 30 Jul, 2015 04:37 PM

 

Published : 30 Jul 2015 04:37 PM
Last Updated : 30 Jul 2015 04:37 PM

பஞ்சாப் தாக்குதலில் ஈடுபட்டது பாக். தீவிரவாதிகளே: ராஜ்நாத்

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தே ஊடுருவியதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவை குறைத்து மதிப்பிட்டால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் உறுதியுடன் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதி மரியாதையையொட்டி மாநிலங்களவை இன்று மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் உணவு இடைவேளைக்கு பின் மாநிலங்களவை கூடியதும், பஞ்சாப் தாக்குதல் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க துணை சபாநாயகர் குரியன் அனுமதி வழங்கினார்.

அப்போது பேசிய ராஜ்நாத், "இந்திய மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடும் எதிரிகளின் நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறாது.

இதில் அரசு எப்போதும் உறுதியுடன் இருக்கிறது. தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் என்பதில் அரசு கவனத்துடன் உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்றால் அதனை கண்டு அரசு அமைதியாக இருந்துவிடாது.

ஜூலை 27ம் தேதி பஞ்சாபில் தாக்குதல் நடத்துவதற்காக அதிநவீன ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் அணியும் உடையோடு வந்து குர்தாஸ்பூர் காவல் நிலையத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். காலை 5.30 மணிக்கு ஆரம்பித்த சண்டை அடுத்த 12 மணி நேரத்துக்கு நீடித்தது. இறுதியில் நமது வீரர்களால் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளிடமிருந்து ஏகே ரக துப்பாக்கிகள், 2 ஜிபிஎஸ் கருவிகள், 19 பத்திரிகை குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. அவை அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தீவிரவாதிகளின் தாக்குதலில் 3 பொதுமக்கள், 3 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி பலியாகினர். மேலும், 10 பொதுமக்களும் 7 பாதுகாப்புப்படை வீரர்களும் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மரணடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் இன்று அவையில் தெரிவிக்கப்பட்டது.

எல்லையைக் காக்கும் பணியில் ராணுவத்தினர் தங்களது உயிரையும் பணயம் வைத்து பாதுகாக்கின்றனர். அடர்ந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணிகள் சிரமம் இருந்து வருகிறது. எல்லையில் பாயும் நதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு இருந்தபோது அதனை பயன்படுத்தி தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர்.

பஞ்சாபின் தாஷ் பகுதியில் ராவி நதி பாகிஸ்தானை அடையும் பகுதியிலிருந்து தக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர்.

5 முறை இந்த ஊடுருவல் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. இதில் பஞ்சாப் போலீஸாரின் பங்கு பாராட்டுக்குரியது. இந்த ஆபரேஷனை முன்னின்று நடத்திய துப்பறியும் போலீஸ் கண்காணிப்பாளர் பல்ஜீத் சிங் வீர மரணம் அடைந்தார்.

இந்த ஆபரேஷன் நடந்தபோது பாதுகாப்புப் படை வீரர்களும் ராணுவத்தினரும் உச்சகட்ட கண்காணிப்புப் பணியில் எல்லையைக் காத்துவந்தனர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x