Published : 19 Aug 2019 09:58 AM
Last Updated : 19 Aug 2019 09:58 AM

ராகுல் காந்தி போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியவர்: சிவராஜ் சிங் சவுகான் கிண்டல்


பானாஜி,

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த விவகாரத்தில், ராகுல் காந்தியிடம் கருத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓடியவர் என்று மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கிண்டல் செய்துள்ளார்.

கோவா மாநிலம் பானாஜி நகருக்கு பாஜகவின் தேசியத் துணைத் தலைவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகான் நேற்று சென்றார். அங்கு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி என்பது கடவுளின் உத்தரவு. மனிதர்களால் உருவானது அல்ல. கடவுள் பாஜகவை ஆசிர்வதித்துள்ளார். பாஜகவின் நட்சத்திரத் தலைவர்களால் ஜன சங் தோற்றுவித்த காலத்தில் இருந்து கட்சி பல்வேறு பரிமாணங்களை அடைந்து, மாற்றம் கண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு கல்வி நிறுவனம். பாஜகவும், இந்த தேசமும் பிரதமர் மோடி போன்ற தலைவரைப் பெற அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பாஜகவில் தலைவர்கள் ஜோடியாக உருவாகி இருக்கிறார்கள். ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டிட் தீனதயால் உபாத்யாயா, அடல்பிஹாரி வாஜ்பாய், அத்வானி இப்போது பிரதமர் மோடி, அமித் ஷா என தலைவர்கள் உருவாகியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பாஜக தலைமையில் அரசுகளை பிரதமர் மோடியும், அமித் ஷாவும் உருவாக்கி இருக்கிறார்கள். முதல் முறையாக பாஜக சார்பில் பிரதமர் ஒருவர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளார்.

பிரதமர் மோடியும், அமித் ஷாவும் சேர்ந்து, நாட்டை மிகப்பெரிய உச்சத்துக்குக் கொண்டு செல்கின்றனர். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். இது மனிதர்களால் நடப்பவை அல்ல, கடவுளின் அருள்.

காங்கிரஸ் கட்சி வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது, மாநிலத்தை இரண்டாகப் பிரித்தது, 370 பிரிவை திரும்பப்பெற்றது ஆகியவற்றில் இதுவரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவை திரும்பப் பெற்ற விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து தலைவர் சோனியா காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி கருத்து ஏதும் தெரிவிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால், போர்க்களத்தில் தப்பி ஓடியவர் ராகுல் காந்தி.

கட்சியின் தலைவராக பொறுப்பேற்கும்போது, அது கடினமான பணிதான். அதில் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். தோல்விக்குப் பின் கட்சியைக் கட்டமைப்பது கடினமானதுதான். ஆனால், ராகுல் காந்தி அதைச் செய்யவில்லை''.

இவ்வாறு சிவராஜ் சவுகான் தெரிவித்தார்.


ஏஎன்ஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x