Published : 09 Aug 2019 06:50 PM
Last Updated : 09 Aug 2019 06:50 PM

''காதல் செய்தால் ஏன் பயப்பட வேண்டும்?''- புகழ் பெற்ற பாடல் வரிகளுடன் காதலர்களுக்கு ஆதரவாக ராஜஸ்தான் காவல்துறை ட்வீட்

காதலில் ஈடுபவர்களுக்கு ஆதரவாக 'ராஜஸ்தான் காவல்துறை ''காதலில் ஈடுபடுவது குற்றமல்ல'' என்று குறிப்பிட்டு ட்வீட் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநில அரசு ஆணவக் கொலையைத் தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றிய பின்னர், ராஜஸ்தான் காவல்துறை காதலர்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது.

ராஜஸ்தானில் ஆணவக்கொலை அதிகரித்ததை அடுத்து அங்கு ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி ஆணவக்கொலை செய்து சிக்கினால் 5 லட்சம் அபராதத்துடன் கூடிய கடுமையான தண்டனை உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காதல் திருமணம் செய்பவர்களுக்கு எதிரான எண்ணம் கொண்டோரை எச்சரிக்கும் விதமாக ராஜஸ்தான் போலீஸார் அவர்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு எச்சரிக்கை வாசகத்தை பதிவு செய்துள்ளனர்.

புகழ்பெற்ற பாலிவுட் திரைப்படமான மொகேல் ஏ ஆஸம் திரைப்படத்தின் பாடலில் வரும் புகழ்ப்பெற்ற வரியான “பியார் கியா தோ டர்னா கியா” (''pyar Kiya To Darna Kya '') என்ற வரிகளை உடன் இணைத்துள்ளது.

ட்வீட்டில் இடம்பெற்ற கருத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

''எச்சரிக்கை, ' மொஹல்-ஏ-ஆசம்' காலம் முடிந்துவிட்டது. நீங்கள் எந்த ஜோடியையும் உடல் ரீதியாக சேதப்படுத்த முயற்சித்தால், ராஜஸ்தானின் புதிய ஆணவக் கொலைச் சட்டத்தின்படி, நீங்கள் ரூ .5 லட்சம் அபராதத்துடன் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை பெறவேண்டி இருக்கும். ஏனென்றால் காதலிப்பது குற்றம் அல்ல".

இவ்வாறு ராஜஸ்தான் காவல்துறையின் ட்விட்டர் பதிவு தெரிவிக்கிறது.

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் கடந்த திங்கள் அன்று ஆணவக்கொலைக்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டது.

இம்மசோதாவின்படி, ''இரண்டு பேருக்கிடையே ஏற்படும் திருமண உறவுக்கான சுதந்திரத்துக்குள் பாரம்பரியம் கவுரவம் என்ற பெயரில் குறுக்கிடுவதற்கு 'ராஜஸ்தான் ஆணவக்கொலை தடுப்பு மசோதா, 2019' தடை விதிக்கிறது. கவுரவத்தின் பெயரில் காதல் இணைகளை அல்லது அவர்களில் ஒருவரை ஆணவக் கொலை புரிந்தாலும் அவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்''

இவ்வாறு ராஜஸ்தான் அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x