Published : 05 Aug 2019 12:02 PM
Last Updated : 05 Aug 2019 12:02 PM

அயோத்தி வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரும் மனு: அவசர வழக்காக ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உச்ச நீதிமன்றத்தில் நாளை தொடங்க உள்ள அயோத்தி வழக்கு விசாரணையின் அன்றாட நடவடிக்கைகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கோவிந்தாச்சர்யாவின் கோரிக்கை மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் உள்ள அயோத்தி வழக்கின் விசாரணை நாளையிலிருந்து தொடங்குகிறது. அயோத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண மத்தியஸ்தர் குழு ஒன்றை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அமைத்தது. ஆனால் இக்குழுவின் சமரச முயற்சி தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 6-லிருந்து இவ்வழக்கிற்கான விசாரணை தினமும் நடைபெறும் அறிவித்தது. 

நாளை (செவ்வாய்) தொடங்க உள்ள அயோத்தி வழக்கின் விசாரணையை,  தொலைக்காட்சிகளில் அனைவரும் காணும் வகையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமென பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சர்யா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

கோவிந்தாச்சார்யாவின் மனு அவசரப் பட்டியலில் இடம்பெற்று நீதிபதிகள் எஸ். எ.போப்டே மற்றும் பி. ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவின் விவரத்தைக் கேட்டறிந்த அமர்வின் நீதிபதிகள், "நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான அல்லது நடவடிக்கைகளைப் பதிவு செய்வதற்கான உபகரணங்கள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது. எனவே, இதுகுறித்த மனுவை அவசர வழக்காக  விசாரணைக்கு உடனடியாக ஏற்க முடியாது'' என்று தெரிவித்தனர்.

அதேவேளையில், வழக்கின் விசாரணையை தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வது என்பது அனைத்துத் தரப்பும் கூட்டாக எடுக்கப்பட வேண்டிய முடிவு. இதற்கு கலந்துரையாடல் தேவைப்படும்'' என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x