Published : 01 Aug 2019 04:43 PM
Last Updated : 01 Aug 2019 04:43 PM

அம்மா உணவகம் போன்று செயல்படும் ஆந்திராவில் உள்ள அண்ணா கேண்டீன் திடீர் மூடல்

 

அமராவாதி,

தமிழகத்தில் அம்மா கேண்டீன் போன்று, ஆந்திர மாநிலத்தில் செயல்பட்டு வந்த 204-க்கும் மேற்பட்ட "அண்ணா கேண்டீன்கள்" திடீரென இன்று முதல் மூடப்பட்டுள்ளன.

தினக் கூலி தொழிலாளர்கள், பிச்சை எடுப்போர், ஏழை மக்கள் ஆகியோர் இன்று கேண்டீன் திறக்கப்படாததால் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினார்கள். 

இந்த கேண்டீனுக்கு வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் மாநில அரசு நிறுத்தக் கூறியதால், கேண்டீன் மூடப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், இந்த அண்ணா கேண்டீன் திட்டத்தில் சில மாறுதல்களை ஏற்படுத்தி, விரைவில் புதிய பெயரில் திட்டம் தொடங்கப்படும் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனர் என்.டி. ராமா ராவை மக்கள் அனைவரும் அன்பா அண்ணா(மூத்த சகோதரர்) என்று அழைப்பார்கள். இந்த பெயரை அடிப்படையாக வைத்தும், டிடிபி கட்சியின் கொடியான மஞ்சள் வண்ணத்திலும் இந்த கேண்டீன் தொடங்கப்பட்டது. 

இந்த கேண்டீனில் இருந்து காலை சிற்றுண்டி, மதிய உணவு, இரவு சிற்றுண்டி ஆகியவை ஏழை மக்களுக்கு விலை மலிவாக 5 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் முந்தைய சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததால், திட்டத்தை சீரமைக்க புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவுசெய்துள்ளார்.

இந்த கேண்டீன்களுக்கு அக்ஷய பாத்திரா எனும் நிறுவனம் மூலம் உணவுதயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. அந்த நிறுவனமும் புதன்கிழமையோடு உணவு சப்ளை செய்வதை நிறுத்திக்கொண்டது.  சந்திரபாபு நாயுடுவின் மகனும், டிடிபி கட்சியின் பொதுச்செயலாளருமான நரா லோகேஷ் ட்விட்டரில் கூறுகையில், " முதல்வரே, பசிக்கு அரசியல் தெரியாது. உங்களின் அரசியல் பழிவாங்கலால் ஏழைகள் பசியுடன் தூங்க வேண்டுமா?" எனத் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எப்போது அண்ணா கேண்டீன் திறக்கப்படும், மாற்று ஏற்பாடு என்ன, புதிய பெயரில், வண்ணத்தில் கேண்டீன் எப்போது திறக்கப்படும் என்பது குறித்தான எந்தவிதமான விளக்கமும் அரசிடம் இருந்து இல்லை என்பதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

புதிதாக திறக்கப்படும் கேண்டீனின் பெயர் ராஜண்ணா என்று மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியை மக்கள் ராஜண்ணா என்றுதான் அழைப்பார்கள் என்பதால் அவர் பெயர் வைக்கப்படும் எனத் தெரிகிறது.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x