Published : 27 Jul 2019 05:05 PM
Last Updated : 27 Jul 2019 05:05 PM

கர்நாடக பாஜக அரசுக்கு பெரும்பான்மை கிடைக்குமா? புதுப்பிரச்சினையை கிளப்பும் சித்தராமையா

பெங்களூரு,

கர்நாடகத்தில் அமைந்துள்ள எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி அரசமைப்புச் சட்டரீதியாகவோ அல்லது அறத்தின் அடிப்படையிலோ அமைக்கப்பட்டது அல்ல, அது குதிரை பேரத்தின் வெற்றியாகத்தான் பார்க்கப்படுகிறது, பெரும்பான்மையை எடியூரப்பா எப்படி நிரூபிப்பார்? என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையாக கடுமையாகச் சாடியுள்ளார்.

கர்நாடகாவில் 14 மாதங்கள் ஆட்சியில் இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி கடந்த செவ்வாய்கிழமை (99 உறுப்பினர்கள்) பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்தது. சட்டப்பேரவையில் 105 எம்எல்ஏக்களுடன் இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, ஆளுநர் வாஜூபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி, நேற்று மாலை 4-வது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றார்.

வரும் திங்கட்கிழமை சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடியூரப்பா இருக்கிறார்.  225 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும், சுயேட்சை ஒருவரின் ஆதரவும் இருக்கிறது. சமீபத்தில்  3 எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதிநீக்கம் விட்டதால் 221 ஆகக் குறைந்தது.

இதற்கிடையே 13 அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான ராஜினாமா கடிதத்தின் மீது இதுவரை சபாநாயகர் ரமேஷ் குமார் எந்தவிதமான முடிவும் இதுவரை எடுக்கவில்லை. அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா மீது சபாநாயகர் எடுக்கும் முடிவைப் பொறுத்து மற்ற நடவடிக்கைகள் இருக்கும். 

தற்போது பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாகவுக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால், எடியூரப்பாவுக்கு இருப்பதோ 106 எம்எல்ஏக்கள் மட்டுமே இருக்கிறார்கள் என்பதால், இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவை என்பது கணக்கீடு.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமையா பெங்களூரில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: 

''ஆளுநரைத் தவறாகப் பயன்படுத்தி, சட்டவிரோதமாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆளுநரை தவறாகப் பயன்படுத்தி, எடியூரப்பாக முதல்வராகப் பதவி ஏற்றது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எடியூரப்பா அரசுக்குப் பெரும்பான்மை எப்படி கிடைக்கும்?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 3 எம்எல்ஏக்கள் தவிர்த்து சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை மொத்தம் 221. இதில் பெரும்பான்மைக்கு 111 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், பாஜகவிடம் 105 பேர்தான் இருக்கிறார்கள். ஆனால், 111 எம்எல்ஏக்களின் பட்டியலை பாஜக அளித்திருக்கிறது. 

ஆனால், மும்பையில் தங்கியுள்ள காங்கிரஸ், ஜேடிஎஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் பெயரை அளிக்க முடியாது. அப்படி  இருக்கும்போது 111 எம்எல்ஏக்கள் எங்கு வருவார்கள்?  இது அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படையிலோ அல்லது அறத்தின் அடிப்படையிலோ அமைக்கப்பட்ட அரசு அல்ல.

எவ்வாறு பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். அரசமைப்புச் சட்டத்தின் கீழ் ஏதேனும் அங்கீகாரம் அரசுக்கு இருக்கிறதா? மும்பையில் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை அடைத்து வைக்காமல் இருந்திருநதால், நிச்சயம் குமாராசாமி தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்திருக்காது.

சட்டவிரோதமாக எங்கள் எம்எல்ஏக்களை பாஜக அடைத்து வைத்திருந்தது. இப்போது, இதை மக்களின் வெற்றி என்று பாஜகவினர் கூறுகிறார்கள்.  இது மக்களின் வெற்றி அல்ல, இது குதிரை பேரத்தின் வெற்றி. அதிருப்தி எம்எல்ஏக்கள் இருவர் எனக்கு தொலைபேசி மூலம் அழைத்தார்கள். ஆனால், அவர்களின் அழைப்பை நான் எடுக்கவில்லை”.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார். 

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x