Published : 26 Jul 2019 04:48 PM
Last Updated : 26 Jul 2019 04:48 PM

‘நாடாளுமன்றத்தில் அவசர கதியில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள்’ - 17 கட்சிகள் எதிர்ப்பு; குடியரசு துணைத் தலைவருக்கு கூட்டாக கடிதம்

புதுடெல்லி

நாடாளுமன்றத்தில் எந்த ஒரு மசோதாவுமே நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்படாமல் அவசர கதியில் நிறைவேற்றப்படுவதாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்ஐஏ, முத்தலாக், ஆர்டிஐ திருத்தம், மோட்டார் வாகன திருத்தம், சட்டவிரோத தடுப்புச் செயல்கள், மசோதாக்கள் உள்பட பல மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் எளிதில் மசோதாக்கள் நிறைவேறி வருகின்றன. 

முக்கியமான மசோதாக்களை நாடாளுமன்ற தேர்வுக்குழு மற்றும் நிலைக்குழுவுக்கு அனுப்ப விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முறையிட்டன. ஆனால் இந்த கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்கவில்லை.

இந்தநிலையில்,  மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட 17 கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

நாடாளுமன்றத்தில் முக்கிய சட்டங்கள் பலவும் அவசர கதியில் நிறைவேற்றப்படுகின்றன. எந்த ஒரு மசோதாவுமே நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்படாமல், விரிவான விவாதங்கள் ஏதுமில்லாமல் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுவதற்கு எங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்யவே இந்த கடிதத்தை எழுதுகிறோம்.

சர்ச்சைக்குரிய பல மசோதாக்கள் நிலைக்குழு அல்லது தேர்வுக்குழுவுக்கு அனுப்பட்டு விவாதிக்கப்பட்டு பின்னர் நிறைவேற்றுவது தான் நாடாளுமன்றத்தில் பாரம்பரியமாக உள்ளது. ஆனால் தற்போது இதுபோன்ற நடைமுறைகளை புறக்கணித்து விட்டு மசோதாக்கள் அவசர கதியில் நிறைவேற்றப்படுகின்றன.

14வது மக்களவையில் 60 சதவீத மசோதாக்கள் ஆய்வுக்கு அனுப்பட்டன. 15-வது மக்களவையில் 71 சதவீத மசோதாக்கள் அனுப்பட்டன. ஆனால் தற்போதைய 17-வது மக்களவையில் 14 மசோதாக்கள் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டு விட்டன. இதில் எந்த மசோதாவும் எந்த குழுவுக்கும் அனுப்பப்பவில்லை’’ என அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x