Published : 25 Jul 2019 01:07 PM
Last Updated : 25 Jul 2019 01:07 PM

ராணுவத்தில் சேர்ந்து 2 மாத பயிற்சியைத் தொடங்கினார் தோனி 

புதுடெல்லி, ஐஏஎன்எஸ்

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, பெங்களூருவில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரசூட் ரெஜிமென்டில் சேர்ந்து 2 மாத பயிற்சியை இன்று தொடங்கினார். 

இந்திய ராணுவ பாரசூட் ரெஜிமென்டில் தோனி, லெப்டினென்ட் அந்தஸ்தில் 2011-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது வளரும் இளைஞர்களை ராணுவப் பணியில் ஆர்வத்துடன் சேர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், அதற்கான விழிப்புணர்வாக அவர் அதைச் செய்து வருகிறார்.

உலகக்கோப்பை போட்டியில் தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மந்தமான பேட்டிங் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தோனி ஓய்வு பெற வேண்டும் என்றும் ரசிகர்களில் ஒருதரப்பினர் சமூக ஊடகங்களில் வலியுறுத்தினர். 

இந்த சூழலில் வரும் ஆகஸ்ட் மாதம் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் தோனி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தோனி தாமாக முன்வந்து தொடரில் இருந்து விலகினார். தான் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்கப்போவதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே ராணுவ பாரசூட் ரெஜிமென்டின் அசைவுக்காகக் காத்திருந்த தோனிக்கு, கடந்த வாரம் ராணுவத்தில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று தோனி 106 பாரா டிஏ பாரசூட் ரெஜிமென்டில் முறைப்படி சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து ராணுவ பாரசூட் ரெஜிமென்ட் வட்டாரங்கள் கூறுகையில், "இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ். தோனி முறைப்படி இன்று பாரசூட் ரெஜிமென்டில் சேர்ந்துள்ளார். அவருக்கு எந்தமாதிரியான பயிற்சி அளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜூலை 31 முதல், ஆகஸ்ட் 15-ம் தேதிவரை பயிற்சிக்கான தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தோனி ராணுவத்தில் சேர்ந்து ஆர்வத்துடன் பயிற்சி பெறுவது இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும். வரும்காலங்களி்ல் அதிகமான இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வார்கள்" எனத் தெரிவித்தார்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x