Published : 22 Jul 2019 09:28 AM
Last Updated : 22 Jul 2019 09:28 AM

நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி மருத்துவமனையில் அனுமதியா?

 

பெங்களூரு, ஐஏஎன்எஸ்

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க இருக்கும் நிலையில், அதைத் தவிர்க்கும் பொருட்டு, மருத்துவமனையில் நள்ளிரவில் முதல்வர் குமாரசாமி அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானது. இந்த செய்தியை  முதல்வர் அலுவலகம் மறுத்துவிட்டது. 

 

கர்நாடகத்தில் மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் அமர்ந்து 14 மாதங்கள் ஆகிறது. இந்த ஆட்சியின் மீது அதிருப்தியடைந்த 13 காங்கிரஸ், 3 மஜத எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே,  2 சுயேச்சை எம்எல்ஏக்கள் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்று,  அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர்

 

ராஜிநாமா செய்திருந்த எம்எல்ஏக்கள்  மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். தங்கள் ராஜிநாமா முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கூறி வருகிறார்கள். இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்ஏ ராமலிங்க ரெட்டி தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

இதற்கிடையே முதல்வர் குமாரசாமி தாக்கல் செய்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த வாரம்  விவாதம் நடைபெற்ற நிலையில் அது நிறைவடையாததால், 22-ம் தேதிக்கு(இன்று) அவையின் விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஆளுநர் வஜுபாய்வாலா 19-ம் தேதிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விதித்திருந்த இரு கெடுவையும் சபாநாயகர் கண்டுகொள்ளாமல் அவையை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மாலைக்குள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் அவை கூடியதும் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடந்து முடிந்தபின் வாக்கெடுப்பு நடக்கும்.

பெரும்பான்மைக்கு 105 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை எனும் நிலையில், 100-க்கும் குறைவாகவே முதல்வர் குமாரசாமி அரசுக்கு இருப்பதால், ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது.

இந்த சூழலில் நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்கும் வகையில், முதல்வர் குமாரசாமி நள்ளிரவில் பெங்களூரு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக கன்னட ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.

ஆனால், இந்த செய்தியில் உண்மையில்லை என்று முதல்வர் அலுவலம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், " முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவில்லாமல் இருக்கிறார், அவர் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் தவறானவை. ஊகத்தின் அடிப்படையில் பரப்பிவிடப்படுகின்றன. கூட்டணி ஆட்சிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்கில் வேண்டுமென்றே வதந்திகள் பரப்பிவிடப்படுகின்றன" எனத் தெரிவிக்கப்பட்டது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x