Last Updated : 17 Jun, 2015 03:19 PM

 

Published : 17 Jun 2015 03:19 PM
Last Updated : 17 Jun 2015 03:19 PM

மது போதையை மறைக்க காருக்குள் நாடகம்: மும்பை சாலையில் போலீஸிடம் சிக்கிய பெண்

மும்பையில் மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற பெண், போலீஸிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்தோடு சுமார் 2 மணி நேரம் கார் கதவைப் பூட்டி அநாகரீகமான நடந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மும்பை போக்குவரத்து போலீஸார் தரப்பில் கூறுகையில், "மும்பையைச் சேர்ந்தவர் ஷிவானி பாலி (42), மும்பையின் தெற்குப் பகுதியில் உள்ள வார்லி என்ற இடத்தில் வசித்து வருகிறார். இவர் திங்கள்கிழமை நள்ளிரவு மும்பையின் பந்தரா பகுதி சாலையில் காரை தாறுமாறாக ஓட்டிச் சென்றார். அவரை பணியில் இருந்து போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் பின் தொடர்ந்த நிலையில், அவர்களிடமிருந்து தப்பிக்க காரை மேலும் வேகமாக ஓட்டினார்.

திடீரென ஷிவானியின் கார் நின்ற நிலையில், போலீஸார் காரை மறித்து, அவரிடம் மதுபோதை சோதனை செய்ய முற்பட்டனர். ஆனால் கார் கதைவைத் திறக்காத அவர், தன்நிலை மறந்த நிலையில் அநாகரீகமாக நடந்து கொண்டார். வெளியில் இருந்தவர்கள் கார் கதவைத் தட்டியும் அவர் திறக்கவே இல்லை.

சாலையின் நடுவே நிறுத்திய காரில் இருந்தவாறே சிகரெட் பற்ற வைத்து புகைக்க ஆரம்பித்த அவர், சுமார் 2 மணி நேரத்துக்கு இதே செயல்களில் ஈடுபட்டார்.

ஏசி ஓடிக்கொண்டிருந்ததால், காரின் உள்ளே புகை பரவி இருந்தது. தீ விபத்து ஏற்படும் அபாயம் இருந்ததனால், காரின் கதவை போலீஸார் உடைத்தனர்.

ஷிவானியை வெளியே அழைத்து மேற்கொண்ட சோதனையில், அவர் போதையில் இருந்தது உறுதியானது.

போதையில் கார் ஓட்டியது, பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்தது, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது என்பதான பிரிவுகளில் அவரை கைது செய்தோம். பின்னர், ரூ. 2000 அபராதம் செலுத்திய நிலையில் அவரை விடுவித்தோம்" என்று தெரிவிக்கப்பட்டது.

மும்பையில் கடந்த வாரம் பெண் வழக்கறிஞர், காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் சாலையில் சென்ற இருவர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து பெண் ஓட்டுநர்களை தீவிரமாக கண்காணிக்க போக்குவரத்து போலீஸாருக்கு ஆணையிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x