Last Updated : 12 May, 2015 09:10 AM

 

Published : 12 May 2015 09:10 AM
Last Updated : 12 May 2015 09:10 AM

கோயிலுக்குச் சென்று திரும்பியதும் தீர்ப்பு எழுதிய நீதிபதி

குமாரசாமியின் பூர்விகம் கர்நாடக மாநிலம் பெல்லாரி என்றாலும், பிறந்து வளர்ந்தது பெங்களூருவில்தான். ஏழ்மை யான குடும்பத்தைச் சேர்ந்த குமாரசாமி அரசுப் பள்ளியில் படித்து, முதல் தலைமுறையாக கல்லூரியை மிதித்தார். தனது தந்தையின் ஆசையின்படி பெங் களூரு சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். 12 ஆண்டுகள் வழக்கறிஞராக வலம்வந்த குமாரசாமி 1995-ல் பெங்களூரு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பொறுப்பேற்று சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை விசாரித்தார். குடும்ப நல நீதிமன்றம், லோக் ஆயுக்த நீதிமன்றம் ஆகியவற்றில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின், 2005-ல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி யாகவும், 2007-ல் நிரந்தர நீதிபதி யாகவும் பதவியேற்றார்.

முல்பாகலில் முடிவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது அவருடன் நெருங்கிப் பழகியுள்ளார். இருவரும் நெருக்க மான நண்பர்கள் என்பதால் விடுமுறை காலங்களில் சிருங்கேரி கோயிலுக்கும், முல்பாகல் சிக்கு திருப்பதி கோயிலுக்கும் சென்று பூஜை செய்து வருவார்கள். ஜெயலலிதா வழக்கில் தீர்ப்புக்கு இறுதி வடிவம் கொடுத்துவிட்டு மே 3-ம் தேதி தனியாக சிக்கு திருப்பதி கோயிலுக்கு சென்று பிரம்ம முகூர்த்த பூஜை செய்துள்ளார் குமாரசாமி. அநேகமாக அங்கு சென்று வந்த பிறகுதான் தீர்ப்பின் முடிவை தீர்மானித்திருக்கிறார். இதனை குமாரசாமியுடன் பணியாற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உறுதியாக சொல்கிறார்கள்.

கடைசி நிமிடத்தில்..

கடந்த 2 மாதங்களாக தினமும் காலை 9.30 மணிக்கு நீதிமன்றத்துக்குள் நுழையும் அவரது கார் மாலை 6.50 மணிக்கு தான் வீட்டுக்கு கிளம்பும். அதுவரை சேம்பரில் இருந்து இயற்கை உபாதைகளை தவிர எதற்கும் எழுந்து போகாமல் தீர்ப்பெழுதியுள்ளார். இந்த பணிக்காக தான் தேர்ந்தெடுத்த‌ 7 பேர்களில் நம்பிக்கையான 3 பேரிடம் முக்கிய பக்கங்களை தட்டச்சு செய்ய கொடுத்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமைகளிலும் தீர்ப்பெழுதும் பணி நடந்தது. நீதிபதியின் தனி வழி காட்டு தலின்படி நீதிமன்ற உதவி அதிகாரி லாவண்யா தீர்ப்பு ஆணையை பிரின்ட் எடுக்கும் பணியில் ஈடுபட்டார். குறிப்பாக தீர்ப்பின் கடைசி இரண்டு பக்கங் களை (ஆப்ரேட்டிவ் போர்ஷன்) நேற்று காலை 7.30 மணிக்கு வந்து தயாரித்துள்ளார். ஏனென்றால் தீர்ப்பின் முடிவு வெளியே கசிந்து விடக்கூடாது என்பதற்காகவே குமாரசாமி இவ்வாறு செய்துள்ளார்.

அதிரடி தீர்ப்புகள்

ஆயிரம் வழக்குகளுக்கு மேல் விசாரித்துள்ள அவர் அதில் சரிபாதி வழக்குகளில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உறுதி செய்துள்ளார். ஆனால் பெரிய வழக்குகளிலும், பிரபல வழக்கு களிலும் விசாரணை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கியுள்ளார்.

இதற்கு உதாரணமாக முத்திரைத்தாள் மோசடி மன்னன் கரீம் தெல்கி, சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா, பி.டி. பருத்தி போன்ற வழக்குகளை கூறலாம். அதே போல நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய கம்பாளப்பள்ளி கிராமத்தில் 7 தலித்துகள் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ‘தலித் படுகொலைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை' எனக்கூறி அனைவரையும் விடுதலை செய்தார்.

வருகிற ஆகஸ்ட் மாதத்துடன் ஓய்வு பெறுகிற குமாரசாமி மீது இதுவரை பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் இல்லை. இருப்பினும் தவறான ஆவணங்களை தாக்கல் செய்து இரு வீடுகள் பெற்றதாக புகார் எழுந்தது. அப்போது இவருடன் சர்ச்சையில் இடம்பிடித்த‌ ஹெச்.எல். தத்து, குமாரசாமிக்கு ஆதர வாக செயல்பட்டு பிரச்சினையை தீர்த்து வைத்தார்.

பெரிதும் பேசப்படும் தீர்ப்பை வழங்கிய குமாரசாமியை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளும், பதிவாளர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் தலைமை நீதிபதி வகேலாவும், ஊழல் தடுப்புத்துறை பதிவாளரும், குன்ஹாவும் சந்திக்கவே இல்லை. தனது தீர்ப்பால் இவர்கள் அதிருப்தி அடைந்திருக்கலாம் என குமாரசாமி தனது உதவியாளர் கனகராஜிடம் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x