Last Updated : 09 May, 2015 09:03 PM

 

Published : 09 May 2015 09:03 PM
Last Updated : 09 May 2015 09:03 PM

சமூகப் பாதுகாப்பு திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற குறிக்கோளை எட்டும் வகையில், காப்பீடு, ஓய்வூதியம் தொடர்பான 3 சமூகப் பாதுகாப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் இன்று தொடங்கி வைத்தார். நாட்டின் பிற மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு நரேந்திர மோடி முதன்முறையாக மேற்குவங்கத்துக்கு சென்றார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமரின் சுரக் ஷா பீம யோஜனா (விபத்து காப்பீடு), பிரதமரின் ஜீவன் ஜோதி பீம யோஜனா (ஆயுள் காப்பீடு) மற்றும் அடல் பென்ஷன் யோஜனா (ஓய்வூதியம்) ஆகிய மூன்று திட்டங்களை மோடி அறிமுகம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் உடன் இருந்தார்.

காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்களில் சேராத, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இந்தத் திட்டங்கள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்களை அறிமுகம் செய்துவைத்த பின்னர் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஏழை மக்களின் நலனுக்காக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. ஆனால் வங்கிகளில் ஏழைகளை பார்க்க முடியவில்லை. வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக ஏற்படும் உயிரிழப்பு, விபத்தால் ஊனம் அடைதல், ஓய்வு காலம் ஆகிய இக்கட்டான சூழ்நிலையில் உதவும் காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட திட்டங்கள் பெரும்பாலான ஏழை மக்களை எட்டவில்லை.

ஒரு நாட்டின் வளர்ச்சிப் பயணம் என்பது ஏழைகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வளர்ச்சி என்ற பழத்தின் பலன் ஏழைகளைச் சென்றடையாதவரை வளர்ச்சி என்பது முழுமையற்றதாகவே இருக்கும். எனவே ஏழைகளின் நலனைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வங்கிக் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் இந்த திட்டங்களில் சேர்ந்து பயனடையலாம். விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆண்டு பிரீமியமாக ரூ.12 செலுத்தி ரூ.2 லட்சம் வரை காப்பீடு பெறலாம். ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.330 பிரீமியம் செலுத்தினால் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

ஓய்வூதிய திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் சேரலாம். மாதந்தோறும் ரூ.42 முதல் ரூ.210 வரை முதலீடு செய்யலாம். ஆண்டுதோறும் இந்தத் தொகையை செலுத்தி வந்தால், 60-வது வயதிலிருந்து மாதந்தோறும் ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை ஓய்வூதியம் பெறலாம்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது, “ரவீந்திரநாத் தாகூரின் 153-வது பிறந்த நாளில் இத்தகைய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் 2011-ல் ஆட்சிக்கு வந்தபோது, மொத்தம் உள்ள 3,000 பஞ்சாயத்துகளில் 1,000 பஞ்சாயத்துகளில் வங்கி வசதி இல்லை. இப்போது வங்கிக் கிளை இல்லாத பஞ்சாயத்து எண்ணிக்கை வெறும் 17 ஆகக் குறைந்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x