Last Updated : 09 May, 2015 11:42 AM

 

Published : 09 May 2015 11:42 AM
Last Updated : 09 May 2015 11:42 AM

பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு: சத்தீஸ்கரில் 500 பேர் சிறைபிடிப்பு - மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அட்டூழியம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்கு சென்றார்.

அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 500 கிராமவாசிகளை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சிறைபிடித்துச் சென்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் 10 மாவட் டங்களில் மாவோயிஸ்ட்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அந்த மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு மாவோயிஸ்ட்கள் செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த 2010 ஏப்ரல் 6-ம் தேதி தந்தேவாடா பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்கு தலில் சிஆர்பிஎப் படையைச் சேர்ந்த 76 வீரர்கள் கொல்லப்பட்டனர். கடந்த 2013 மே 25-ம் தேதி அதே பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

மாவோயிஸ்ட்களை கட்டுப் படுத்த சி.ஆர்.பி.எப். போலீஸார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதால் அவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதற்குப் பழிவாங்கும் வகையில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங் களில் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ் டுகள் தொடர் தாக்குதல்களை நடத் தினர்.

சத்தீஸ்கரில் தற்போது முதல்வர் ரமண் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு தீர்வு காண தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

அந்த வகையில் சுக்மா மாவட் டத்தில் இரண்டு மிகப்பெரிய வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று அங்கு சென்றார்.

தந்தேவாடா பகுதி தில்மிலி கிராமத்தில் ரூ.18,000 கோடியில் மிகப்பெரிய உருக்கு ஆலை அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தம் மோடி முன்னிலையில் கையெழுத்தானது. இதன்மூலம் அப் பகுதியைச் சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ரூ.24,000 கோடி திட்ட மதிப்பிலான ரோகாட்-ஜகதால்பூர் ரயில்வே பாதை திட்டப் பணியையும் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.

500 பேர் சிறைபிடிப்பு

இதனிடையே பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முழுஅடைப்பு போராட் டத்துக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு விடுத்திருந்தனர். மேலும் மோடியின் நிகழ்ச்சிகளை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்திருந்தனர். இதன்காரணமாக பாதுகாப்பு பணிக்காக தந்தேவாடா பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு டோங்பால் பகுதி கிராமங் களுக்குள் ஆயுதங்களுடன் புகுந்த மாவோயிஸ்ட்கள் சுமார் 500 கிராமவாசிகளை சிறைப் பிடித்தனர்.

இதுகுறித்து மாவட்ட கூடுதல் எஸ்.பி. ஹரீஷ் ரதோர் கூறியபோது, டோங்பால், மாரெங்கா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 400 முதல் 500 பேரை மாவோயிஸ்ட்கள் சிறைப்பிடித்து சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

உள்ளூர் ஊடகங்கள் வெளியிட் டுள்ள செய்திகளில், நான்கு கிராமங் களைச் சேர்ந்த சுமார் 1000 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜக தொண்டர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. சிறை பிடிக்கப்பட்ட கிராமவாசிகள் அனைவரும் அடர்ந்த வனப் பகுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மூத்த அதிகாரிகள் மறுப்பு

இதனிடையே சில போலீஸ் அதிகாரிகள், இந்தச் செய்தியை மறுத்துள்ளனர். இதுகுறித்து பஸ்தர் பகுதி ஐ.ஜி. கல்லாரி கூறியதாவது:

மரெங்கா கிராமத்தில் ஆற்றுப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு மாவோயிஸ்ட்கள் எதிர்த்து தெரிவித்து வந்தனர். பாலம் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 6 தொழிலாளர்களை அவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். தொழிலாளர்களை மீட்பது தொடர்பாக சுற்றுவட்டார கிராம மக்களில் சிலர் மாவோயிஸ்ட் தலைவர்களை சந்தித்துப் பேச வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இது வழக்கமாக நடைபெறும் சம்பவம்தான். இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி 500 பேர் சிறை பிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியிட்டுள்ளன என்று தெரிவித்தார்.

பாஜக கடும் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக ராய்ப்பூரில் பாஜக செய்தித் தொடர்பாளர் சந்த் சுந்த்ரணி, நிருபர்களிடம் கூறியதாவது: மாவோ யிஸ்ட்டுகளின் நடவடிக்கை கோழைத்தனமானது, அவர்களின் தீவிரவாதத்தால் அரசின் வளர்ச்சித் திட்டப் பணிகளை தடுக்க முடி யாது. பாதுகாப்புப் படையினரின் அதிரடி நடவடிக்கைகளால் மாவோ யிஸ்ட் தீவிரவாத தலைவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதன் காரணமாகத்தான் அவர்கள் கிராமவாசிகளை சிறைப்பிடித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

துப்பாக்கியை தூக்கி எறியுங்கள்: மாவோயிஸ்ட்களுக்கு பிரதமர் அழைப்பு

துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு கலப்பையை தோளில் ஏந்துங்கள் என்று மாவோயிஸ்ட்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்துக்கு அவர் நேற்று சென்றார். இதையொட்டி அவர் கூறியதாவது:

இந்தியாவின் எதிர்காலத்தை வளமாக்கும் வலிமை சத்தீஸ்கர் மாநிலத்துக்கு உள்ளது. பஸ்தர் பகுதியில் ஒரு மணி நேரத்தில் ரூ.24,000 கோடி மதிப்புள்ள ரயில்வே திட்டம் கையெழுத்தாகியுள்ளது.

ஒரு காலத்தில் சத்தீஸ்கரில் இருந்து இரும்பு தாதுவை அனுப்பி இரும்பு பொருட்களை இறக்குமதி செய்தோம். இப்போது சொந்த மாநிலத்திலேயே இரும்பு தாதுவில் இருந்து இரும்பு பொருட்களை தயாரித்து வருகிறோம்.

வன்முறை அழிந்துவிடும். எதிர்காலத்தில் அமைதி மட்டுமே நிலைத்திருக்கும். எனவே தவறான பாதையில் சென்று கொண்டிருக்கும் இளைஞர்கள் துப்பாக்கியை தூக்கி எறிந்துவிட்டு கலப்பையை தோளில் ஏந்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x