Last Updated : 28 May, 2015 01:12 PM

 

Published : 28 May 2015 01:12 PM
Last Updated : 28 May 2015 01:12 PM

மோடி பாணி நீடித்தால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது: ப.சிதம்பரம் பதிலடி

குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் இப்போது இந்தியாவின் முதல்வராகவே மாறியிருக்கிறார் என நரேந்திர மோடியை முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

மேலும், மோடி தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் இதே பாணியில் தொடர்ந்தார் என்றால் அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று (புதன்கிழமை), காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் சோனியா காந்தி அரசியல் சாசன சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக இருந்தார் என்று பிரதமர் மோடி பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். | வாசிக்க - >காங்கிரஸ் ஆட்சியில் சோனியா அதிகார மையமாக இருந்தார்: மோடி பகிரங்க குற்றச்சாட்டு |

அதற்கு பதிலளிக்கும் வகையில் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம், "சோனியா காந்தி அரசியல் சாசன சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக இருந்தார் எனக் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.

பாஜக ஆட்சியில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மறைமுக அதிகாரத்தில் இருக்கிறது. பாஜக அமைச்சர்கள் எதெற்கெடுத்தாலும் ஆலோசனைக்காக நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு எதற்கு ஓடுகின்றனர்.

காங்கிரஸ் ஆட்சியின்போது அரசின் கொள்கை முடிவை சோனியா காந்தி எடுத்தார் என்று கூறுவதற்கு ஒரே ஒரு சான்றுகூட கிடையாது.

ஆனால், பாஜக ஆட்சியில் தினமும் குறைந்தது 4 அமைச்சர்களாவது நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு ஓடுவதை கண்கூடாக காண முடிகிறது.

அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசிடமே வைத்துக் கொள்ள மோடி முற்படுகிறார். எல்லா முடிவுகளும் மோடியால் மட்டுமே எடுக்கப்படுகின்றன. குஜராத்தில் அவர் முதல்வராக இருந்தபோது எப்படி செயல்பட்டாரோ அதே போல் இப்போதும் செயல்படுகிறார். மாநில முதல்வர் அப்படிச் செய்யலாம் ஆனால் இந்தியப் பிரதமர் அப்படிச் செய்ய இயலாது.

ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் இப்போது இந்திய தேசத்துக்கே முதல்வராக செயல்படுகிறார். இதை நான் மட்டும் சொல்லவில்லை, பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

மோடி தற்போது மத்தியில் ஆட்சி செய்யும் இதே பாணியில் தொடர்ந்தார் என்றால் அவரால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது" என்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்படவில்லை என அமித் ஷா குற்றம் சாட்டியிருப்பது தொடர்பான கேள்விக்கு, "மற்றவர்களை குறை கூறி தங்கள் சுயரூபத்தை மறைக்க முயல்கிறது பாஜக" எனத் தெரிவித்தார்.

ஆச்சார்யா பரிந்துரைக்கு ஆதரவு:

மேலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீடு செய்யும் விவகாரத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா பரிந்துரையை தான் ஆதரிப்பதாக இதே பேட்டியில் அவர் கூறியுள்ளார். | அதன் விவரம்: >ஜெ. வழக்கு: பி.வி.ஆச்சார்யா பரிந்துரைக்கு ப.சிதம்பரம் ஆதரவு |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x