Last Updated : 21 May, 2015 02:16 PM

 

Published : 21 May 2015 02:16 PM
Last Updated : 21 May 2015 02:16 PM

அவசர கால ஒத்திகை: போர் விமானத்தை நெடுஞ்சாலையில் தரையிறக்கி சோதனை

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிராஜ் 2000 என்ற போர் விமானத்தை, விமான ஓடுதளத்துக்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலையில் தரையிறக்கி சோதனை செய்யப்பட்டுள்ளது.

அவசர கால பயன்பாட்டுக்காக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சோதனையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவில் யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறும்போது, "நெருக்கடி நேரங்களில், போர் விமானங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் தரையிறக்குவது குறித்து இந்திய விமானப் படை வெகு காலமாக பரிசீலித்து வந்தது.

அதன் அடிப்படையில், இன்று காலை 6.40 மணியளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முதலில், விமானத்தின் வேகம் குறைக்கப்பட்டு சாலையில் இருந்து 100 மீட்டர் உயரத்தில் பறக்கச் செய்யப்பட்டது. பின்னர் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

இதற்காக தற்காலிக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பு சேவைகள், மீட்பு வாகனங்கள், பறவைகளை விரட்டும் குழுக்கள் மற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஏதாவது நெருக்கடி நிலையில் விமான நிலையங்களில் விமானத்தை தரையிறக்க முடியாத சூழல் ஏற்படும்போது, இத்தகைய முறையை பின்பற்றலாம்.

இந்த செயல்முறை சோதனைக்கு ஆக்ரா மற்றும் மதுரா மாவட்ட நீதிபதியும், எஸ்.பி.யும் ஒத்துழைப்பு நல்கினர்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x