Last Updated : 22 May, 2015 07:11 AM

 

Published : 22 May 2015 07:11 AM
Last Updated : 22 May 2015 07:11 AM

முஸ்லிம் இளைஞரின் வேலை விண்ணப்பம் நிராகரிப்பு: மும்பை நிறுவனத்தின் நடவடிக்கையால் சர்ச்சை

மும்பையைச் சேர்ந்த ஜேஷன் அலி கான் (22) சமீபத்தில் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவர் முன்னணி வைர நகை ஏற்றுமதி நிறுவனமான ஹரிகிருஷ்ணா எக்ஸ் போர்ட்ஸில் விற்பனைப் பிரதிநிதி வேலைக்கு கடந்த 19-ம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்திருந்தார். மேலும் 2 இளைஞர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.

இந்நிலையில், அடுத்த 15 நிமிடத்தில் ஜெஷனுக்கு அந்த நிறுவனம் மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்பி இருந்தது. அதில், “முஸ்லிம் அல்லாதவர்களை மட்டுமே வேலைக்கு சேர்ப்போம் என்பதை வருத்தத்துடன் தெரிவித் துக் கொள்கிறோம்” என குறிப் பிட்டிருந்ததைக் கண்டு ஜேஷன் அதிர்ச்சி அடைந்தார்.

இந்தத் தகவலை சமூக இணையதளத்தில் ஜேஷன் அலி பதிவேற்றம் செய்திருந்தார். அந்த நிறுவனத்தின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நிறுவனம் வருத்தம் தெரிவித்து ஜேஷனுக்கு மீண்டும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியது.

அந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் ஃபேஸ்புக்கில், “எங்கள் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவில் புதிதாக வேலைக்கு சேர்ந்த ஊழியர்கள் தவறுதலாக இப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பிவிட்டனர். ஆனால், ஜாதி, மதம், பாலின பாகுபாடு இல்லாமல் எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது” என பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, சமூக ஆர்வலர் ஷேசாத் பூனவல்லா என்பவர் தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து ஜேஷன் அலியின் தந்தை முகமது அலி கூறும்போது, “முஸ்லிம் என்பதால் எனது மகன் விண்ணப்பத்தை நிராகரித்த விவகாரத்தில் நீதி கேட்டு போலீஸில் புகார் செய்துள்ளோம்” என்றார். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று மாநில சிறுபான்மையினர் நலத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x